கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 12 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த அசாதாரண சூழ்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொதுமக்களின் பங்களிப்பாக ரூ. 100 முதல் நிவாரண நிதியாக கொடுத்து உதவுகின்ற உள்ளங்களை ஊக்குவிக்கின்ற வகையில், வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
கரோனா நிவாரண நிதிக்காக தாம் சேமித்து வைத்திருந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து இந்த சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும், நாட்டிற்கு உதவும் எண்ணமும் கொண்ட விசாக் என்ற தம்பிக்கு தனது அன்பார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையிலும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் தங்களது தவறான கருத்துகளை வெளியிட்டு வருவதால், உண்மையாக உதவி வருகின்ற உள்ளங்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது. கரோனா தடுப்பு நிவாரண பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் 12 காண்காணிப்புக் குழுவை அமைத்தார். இதன் மூலம் தற்போது 2,500 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் அக்குழுக்களோடு இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.