தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பஞ்சப்படியை பறித்ததோடல்லாமல் அரசு ஊழியர் - ஆசிரியர்களை மக்கள் விரோத சக்திகள்போல் சித்திரித்துவரும் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் - அரசு ஊழியர், ஆசிரியர்கள் நெஞ்சம் நெகிழத் தேவையில்லை. வஞ்சம் இன்னும் மாறவில்லை எனத் தோன்றுகிறது.
நிதி அமைச்சர் அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பற்றி சட்டப்பேரவையிலும், ஊடகங்களிலும் அவதூறாகப் பேசிவருவது கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றுக்கொண்டு 100 நாள்கள் கடந்த நிலையில், மக்களுக்கான அடிப்படை நலத் திட்டங்களை அறிவித்துவருவதோடு, மேலும் தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துவருவது பாராட்டுக்குரிய நிகழ்வாகும்.
அதே நேரத்தில் தேர்தல் கால வாக்குறுதிகள் ஒருபுறமிருக்க சட்டப்பேரவையிலும், ஊடகங்கள் வாயிலாகவும் நிதி அமைச்சர் அரசு ஊழியர், ஆசிரியர்களை மக்களுக்கெதிராகத் திசைதிருப்பும் வகையில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளைப் புறம்தள்ளி, கரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் உயிரைத் துச்சமென மதித்து பல்வேறு இன்னல்களுக்கிடையே மக்கள் பணியினை மேற்கொண்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இக்காலத்தில் ஒருநாள்கூட சம்பளம் / ஓய்வூதியம் இழக்காமல் பெற்றுவருகின்றனர் எனத் தொலைக்காட்சி பேட்டியில் அரசு ஊழியர், ஆசிரியர்களை மக்களுக்கு எதிராகத் திசைதிருப்பும் வகையில் ஏளனமாகப் பேசிவருகிறார்.
மேலும் தமிழ்நாட்டில் அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதி வருவாயில் ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காகவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு ஊடகங்களில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம், ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற தவறான விவரங்களைப் பொது வெளியில் தெரிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்திரிக்க முயன்றுவருகிறார்.
எனவே, தமிழ்நாடு அரசாங்கம் மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறுவது. அதைத் தொடர்ந்து முறையாக வரி வசூலிப்பது மற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலைமைச் சீராக்க சாத்தியமான வழிவகைகளை ஆராயாமல் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பாக நிதி அமைச்சர் தொடர்ந்து தவறான தகவல்கள் மட்டுமின்றி செய்தி வெளியிட்டுவருவதைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதுபோன்று அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு எதிராகப் பேசிவரும் நிதியமைச்சரின் பேச்சினையும், செயலினையும் தரப்படுத்தி, தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையினை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டுமென முதலமைச்சரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.