சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 28) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அளவொப்புமை ஆய்வகங்களுக்கான அங்கீகாரத்துடன் (NABL) செயல்பட்டு வரும் காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் 1.32 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனை வசதிகளை திறந்து வைத்தார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் மின் உற்பத்தி பொருட்களின் தரத்தினை இச்சோதனை வசதிகள் வாயிலாக சோதனைக்கு உட்படுத்தி, தரத்தினை மேம்படுத்தி, தரக்குறியீடுகள் பெற வழிவகை செய்யலாம்.
தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் இணையம் லிமிடெட் (இண்ட்கோசர்வ்) சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டம், குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் 3.29 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஊட்டி டீ -யின் அதிநவீன கலவை மற்றும் சிப்பம் கட்டும் அலகினை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து, இண்ட்கோசர்வ் ஆண்டிற்கு 47.52 லட்சம் ரூபாய் சேமிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் 1.35 கோடி ரூபாய் செலவில் 4,825 சதுர அடி பரப்பளவில் தொழிற்பேட்டையைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கருத்தரங்கு அறை, மருந்தகம், நிர்வாக அலுவலகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொதுவசதி மையக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.