சென்னை:இந்திய விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை கவுரவிக்கும் விதமாக, உயர் கல்வித்துறையின் சார்பில் "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசு தரப்பில் கவுரவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து விண்வெளி துறையில் சாதனை படைத்த நாயகர்களுக்கு நினைவுப் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து விழா மேடையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
பாரதியார் இருந்திருந்தால் இஸ்ரோ சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தமிழ்நாடு என சொல்லி இருப்பார். இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை எனக் கேட்டவர் அண்ணா. அதனால் அவர் பெயரிலான அரங்கில், அறிவியல் அறிஞர்களான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது.