தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குஜராத் முதலமைச்சராக மாநில உரிமை குறித்து பேச்சு.. பிரதமரானதும் மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு" - ஸ்பீக்கிங் பார் இந்தியா குரல்வழிப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!

ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பீக்கிங் பார் இந்தியா (Speaking for india) தொடரின் மூன்றாவது குரல்வழிப் பதிவை வெளியிட்டு உள்ளார்.

MK Stalin
MK Stalin

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 7:37 AM IST

சென்னை :ஸ்பீக்கிங் பார் இந்தியா (Speaking for india) தொடரின் மூன்றாவது குரல்வழிப் பதிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவில் பல்வேறு கருத்துகளை வீடியோ மூலமாக பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த ஆடியோ சீரிஸ்க்கு "ஸ்பீக்கிங் பார் இந்தியா" (Speaking for india) என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைப்பு வைத்து வெளியிட்டார். ஸ்பீக்கிங் பார் இந்தியா சீரிசின் முதல் ஆடியோ பதிவை செப்டம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் குஜராத் மாடல், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய கருத்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" (Speaking for india) ஆடியோ சீரிஸ்சின் இரண்டாவது பாகத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த ஆடியோ சீரிஸ்சில், மத்திய அரசின் திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்து இருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் அது குறித்து பிரதமர் மோடி, பாஜக அரசு மவுனம் காத்து வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், ஸ்பீக்கிங் பார் இந்தியா" (Speaking for india) ஆடியோ சீரிஸ்சின் மூன்றாவது பாகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அந்த ஆடியோ சீரிசில், கடந்த அக்டோபர் இரண்டாவது வாரம் வந்த செய்தியில் மத்திய அரசின் திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்ட சிஏஜி அதிகாரிகள் குழு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த எபிசோடில் மாநில உரிமைகள் பற்றி பேச உள்ளதாகவும், திமுக தனக்கென தனித்துவமிக்க கொள்கைகளுடன் செயல்பட்டு 75 ஆண்டுகளைக் கொண்டாடும் கட்சி மட்டுமல்லாமல், ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாநில சுயாட்சி திமுகவின் முக்கிய குணங்களில் ஒன்று என்றும் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் ஒருங்கிணைந்த தேசமாக இல்லாமல் கூட்டாட்சிக் கொள்கை கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவை உருவாக்கினார்கள் என்றும் கூறி உள்ளார். குஜராத்தின் முதலமைச்சராக பதவி வகித்த போது மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசிய பிரதமர் மோடி, பிரதமராக டெல்லிக்கு சென்றதும், இந்தியா, அதுவே பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்ற அரசியலமைப்பின் முதல் வரியை கூட கடைபிடிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஒரு முதலமைச்சராக, மாநில உரிமைகளைப் பற்றிப் மோடி, தற்போது ஒரு பிரதமராக, அவற்றை ரத்து செய்வதில் குறியாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., மாநிலங்களை ஒழிக்க வேண்டும், இல்லையென்றால், குறைந்தபட்சம் அவை வெறும் நகராட்சிகளாக குறைக்கப்பட வேண்டும் என்று கருதுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடியின் பிம்பத்தை இந்தியா கூட்டணி உடைத்து உள்ளதாகவும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

யூடியூப், ஸ்பாடிஃபை, சவுன்ட் கிளவுட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆடியோ சீரிஸ் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பின்னணி குரல் மூலம் முதலமைச்சரின் ஸ்பீக்கிங் பார் இந்தியா சீரிஸ் வெளியிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :Speaking4India : சிஏஜி அறிக்கையில் பாஜக மவுனம் ஏன்? ஸ்பீக்கிங் பார் இந்தியா குரல்வழிப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details