இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறையருளைப் பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள், நோன்பிருந்து உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை மக்களுக்கு உணவளித்து, வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என இறைவனைத் தொழுது ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
அதனால் தமிழ்நாடு அரசு இஸ்லாமிய பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கியது. இஸ்லாமியப் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை 2 கோடி ரூபாயிலிருந்து 2.50 கோடி ரூபாயாக உயர்த்தியது.
ஏழ்மையிலுள்ள ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, வயது முதிர்ந்த இஸ்லாமிய மகளிர் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மகளிர் உதவும் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு இணை மானியம் வழங்கியது. உலகமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தியது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டுவரும் நிர்வாக மானியத்தை 30 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.
மேலும் நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டுதோறும் விலையில்லாமல் வழங்கி வருவது, மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சமூகப் பணிகளுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கி வருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தப் புனித ரமலான் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என வாழ்த்தி இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும்' - ஆளுநரின் ரமலான் வாழ்த்து