சென்னை: தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினருக்கும் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் 21 சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக பல புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி, பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.