தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023 வெளியீடு - தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், வாகன பயன்பாட்டிற்கும், 2.30 கோடி வீடுகளுக்கும் குழாயின் மூலம் இயற்கை எரிவாயு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 3:18 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 18) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023”, “தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023”, “தமிழ்நாடு சரக்கு போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023” மற்றும் “தமிழ்நாடு தொழில் நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்” ஆகியவற்றை வெளியிட்டார்.

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023 வெளியீடு

தமிழ்நாடு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பன்நோக்கு திட்டங்களை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கினை அடைந்திட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள்வரை 209 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2 லட்சத்து 34 ஆயிரத்து 123 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 3 லட்சத்து 49 ஆயிரத்து 261 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021 (Tamil Nadu Fintech Policy), தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை 2021 (Tamil Nadu Export Promotion Strategy), தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 (Tamil Nadu Research and Development Policy),

தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022 (Tamil Nadu Aerospace and Defence Industrial Policy), தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 (Tamil Nadu Life Sciences Promotion Policy), தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 (Tamil Nadu Footwear and Leather Products Policy), தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023 (Tamil Nadu Electric Vehicle Policy) ஆகிய கொள்கைகள் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் கீழ்க்கண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023’

கொள்கையின் நோக்கம்:

தமிழ்நாட்டை பசுமை பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்துதல் இக்கொள்கையின் நோக்கமாகும். கொள்கையின் அவசியம் எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் வாகனங்கள் வெளியேற்றும் புகை உமிழ்வு வெகுவாக குறையும் என்பதால் சுற்றுப்புற மாசுபாட்டின் நிலை பெருமளவு குறைந்து, மக்களின் சுகாதாரம் பேணப்படும் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்படும்.

இந்த முயற்சி, ஐக்கிய நாடுகள் சபையின் COP 26 -ல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய புகை உமிழ்வு இலக்கை அடைவோம் என்று இந்தியா அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தமிழ்நாட்டின் முக்கிய பங்களிப்பாக இக்கொள்கை அமையும்.

எத்தனால் கலந்த பெட்ரோலை ஊக்குவிப்பதற்கான காரணிகள்:

உபரி பருவத்தில், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி எற்பட்டு இதனால் சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, விவசாயிகளுக்கு தரப்படவேண்டிய விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை தாமதமின்றி, வழங்கிட இயலும், கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை பயிரிடும் விவசாயிகளின் வருமானம் பெருமளவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

வடிப்பாலை கரையக்கூடிய ஈரதானிய பொருட்கள் (DWGS) மற்றும் வடிப்பாலை கரையக்கூடிய உலர் தானிய பொருட்கள் (DDGS) ஆகியன கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும். எரிபொருள் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்து இருத்தல் குறையும் என்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023:

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமையான எரிபொருளான இயற்கை எரிவாயுவின் உபயோகத்தினை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை தமிழ்நாட்டில் விரைவாக அமைக்க தேவையான விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், வாகன பயன்பாட்டிற்கும், 2.30 கோடி வீடுகளுக்கும் குழாயின் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் சுமார் 35,000 கோடி ரூபாய் முதலீடு 8 ஆண்டுகள் கால அளவில் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்கையின் நோக்கம்

நகர எரிவாயு விநியோகத்திற்கான உட்கட்டமைப்பை விரைவாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல், விரைவான அனுமதிகளை வழங்குதல், இயற்கை எரிவாயு பயன்பாட்டைப் படிப்படியாக ஊக்குவிக்க தேவையான விதிகள்/ ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், பாதுகாப்பான மற்றும் தடையில்லா இயற்கை எரிவாயுவினை விநியோகிக்க தேவையான உட்கட்டமைப்பை நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் பராமரிக்க வலியுறுத்துதல், மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாக ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாகும்.

தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023

மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகமான, சிக்கனமான, நிலையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்துச் சூழல் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போட்டித்திறனை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முக்கிய கருப்பொருட்கள் (Themes)

ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பினை உருவாக்குதல், குறைந்த செலவிலான மற்றும் உயர்ந்த தரத்திலான சேவைகள் கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல், ஒற்றைச்சாளர அனுமதி வழங்கும் அமைப்பை உருவாக்குதல், சரக்கு போக்குவரத்து சூழல்அமைப்பின் மீள்திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதி செய்தல் (Resilience & Sustainability), புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்தல் (New Technology), சரக்கு போக்குவரத்துத் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் (Skill Development) ஆகியவை இக்கொள்கையின் முக்கிய கருப்பொருட்கள் ஆகும்.

இக்கொள்கையின் மூலம் சரக்கு போக்குவரத்து துறைக்கு, “தொழில் அந்தஸ்து (Industrial Status) வழங்குதல், “ஒற்றை சாளர அனுமதி” (Single Window Clearances) வழங்குதல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து துறையில் புதிய தொழில் நுட்ப உத்திகளை செயற்படுத்துதல், திறன் மேம்படுத்துதல், நிலைப்பு தன்மையை (Sustainability) உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கப்படும்.

“சரக்கு போக்குவரத்து செயல் திட்டம்” (Logistics Plan) மூலம் மூன்று பெருவழி தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.63,000 கோடி அளவிற்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.

செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்

இச்சிறப்புத் திட்டமானது, உயர் மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதித் திறன் கொண்ட புதிய தலைமுறை ஜவுளி பிரிவுகள் (தொழில் நுட்ப ஜவுளி/ செயற்கைஇழை நூல்) மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கைஇழை நூல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆடை உற்பத்தியில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் வழங்க உதவுகிறது.

பெரிய திட்டங்களுக்கு சற்றே குறைவாக உள்ள முதலீடுகளுக்கும் அதிக அளவிலான ஊக்கத் தொகை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஊக்குவித்து, இத்துறையை பல்வகைப்படுத்துதல், மாநிலம் முழுவதும், முக்கியமாக தொழில்ரீதியாக வகை செய்யப்பட்டுள்ள ‘B’ & ‘C’ வகை மாவட்டங்களில் சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை குறித்து விளக்குகிறது.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் செயலாளர் ம. பல்லவி பல்தேவ், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சிறுதானிய சந்தை வளர்ச்சியால் 2.5 கோடி விவசாயிகள் பலன் - சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details