சென்னை:தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தால் ரூபாய் 60.55 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 112 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளவாறு தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு வரும், 1.31 இலட்சம் சதுர அடி நிலப்பரப்பில், தரை தளம் மற்றும் 4 மாடிகளுடன் கூடிய கட்டடம் செப்டம்பர் 2023 ல் திறந்து வைக்க தயார் நிலையில் இருக்கும் கட்டிடத்தையும், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், ரூபாய் 29.5 கோடி மதிப்பீட்டில், 5 மாடிகளுடன் கூடிய சுமார் 800 புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கி பணிபுரியும் வகையில், தங்கும் வசதியுடன் கூடிய தொழிலாளர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளையும், தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்துடன் கலந்துரையாடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை களைய உத்திரவாதம் அளித்தார். பின்னர் திருமுடிவாக்கம், தொழிற்பேட்டையில் 47.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள துல்லியமான உற்பத்திக்கான மாபெரும் தொழில் குழுமங்களுக்கான திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், அதற்கான இடத்தினையும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.