தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இறையன்பு ஐஏஎஸ். புதிய அமைச்சரவை இன்று(மே.7) பதவியேற்றதைத் தொடர்ந்து, இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக இருந்த காலத்தில் கலவரங்களை கட்டுப்படுத்த நாகூர் தர்காவில் இரவு முழுக்க தங்கியதும், கடவுள் சிலை ஊர்வலத்துடன் இவரும் நடந்தே சென்றதும் இன்றளவும் பேசப்படும் நல்லிணக்கத்துக்கான உதாரணம்.
நிர்வாகத்தைப் பொறுத்தவரை இவர் பணியாற்றாத பதவிகளே இல்லை எனலாம். 1995ம் ஆண்டு நிகழ்ந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின் தனி அலுவலராகச் செயல்பட்டார். நகராட்சி நிர்வாக இணை ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், செய்தி மற்றும் சுற்றுலாத்துறையின் செயலர், முதலமைச்சர் அலுவலகத்தின் கூடுதல் செயலர், பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலர், பொருளியல் துறையின் முதன்மைச் செயலர், தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறையின் முதன்மைச் செயலர் என பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் இறையன்பு.
இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில்தான் தறியில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்தார். கடலூரின் கூடுதல் ஆட்சியராக இவர் இருந்த காலத்தில்தான் பெண்களுக்கான ஆட்டோ ஓட்டும் பயிற்சி முதன்முதலில் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் உழவர் சந்தை செயல்படுத்தப்பட்டதிலும், மினிபஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலும் முக்கிய பங்காற்றினார் இறையன்பு.
கல்வி மேல் கொண்ட காதலும், பன்முகத் தன்மையும்
இவர் சுற்றுச்சூழல் செயலராக இருந்த காலத்தில்தான் மாநிலத்திலேயே முதன்முறையாக சுற்றுச்சூழல் கொள்கை வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பிறந்த இறையன்பு, தமிழ்நாடு அரசு அலுவலராக மட்டுமல்லாமல் தனிநபராகவும் தன்னை செதுக்கிக்கொண்டவர். விவசாயத்தில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம், உளவியலில் முதுகலைப் பட்டம், வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், என கல்வியின் மீது பெருங்காதல் கொண்டு பட்டங்களை குவித்தவர். 1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.
கல்வி மேல் கொண்ட வெ.இறையன்பு மாணவர்கள் இந்திய ஆட்சிப்பணிக்கு வரவேண்டும் என்பதற்காக ‘ஐஏஎஸ் தேர்வும் அணுகுமுறையும்’, ‘படிப்பது சுகமே’, ‘ஐஏஎஸ் வெற்றிப் படிக்கட்டுகள்’ என பல புத்தகங்களை எழுதியுள்ளார். நாவலாசிரியர், சிறந்த பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை இந்தப் பரிவான முகத்துக்கு உண்டு.