சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளிலுள்ள 4.50 இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திட வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் மற்றும் செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசு அதனைப் பின்பற்றி அரசு பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்பதனை, தற்போது செயல்வடிவம் கொடுத்து, 42 சதவிகிதத்திலிருந்த அகவிலைப்படியினை 46 சதவிகிதமாக உயர்த்தி கடந்த ஜூலை (01.07.2023) மாதம் முதல் வழங்கிட உத்தரவிட்டதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
2021க்குப் பிறகு முதன்முறையாக அகவிலைப்படியானது முன்தேதியிட்டு வழங்கப்படுவதால், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மத்திய அரசிற்கு இணையான தேதியில் அகவிலைப்படி உயர்வினைப் பெறுவதோடு நிலுவைத் தொகையினையும் கொண்டுள்ளதால் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.