சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் இறையன்பு, இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் திரு. டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு மாத இதழ், அரசின் சாதனைகளை சொல்வது மட்டுமில்லாமல் சமகால இலக்கியங்களைக் காத்து வளர்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, பண்பாடு, சமூக வளர்ச்சி போன்றவற்றை எடுத்துச்சொல்லும் விதமாக இந்த இலக்கிய மலரினை படைத்துள்ளது.