சென்னை:இந்திய சினிமாவின் 'இசைஞானி' என அழைக்கப்படும் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தாளை கொண்டாடுகிறார். காதல், மகிழ்ச்சி, சோகம் என அனைத்து நிகழ்வுகளுக்கும் 80களில் தொடங்கி 2K கிட்ஸ் வரை அனைவரும் இளையராஜாவின் இசைக்கு அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி தனது பாடல்களால் ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திறன் படைத்தவர். அதனால் தான் மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. அதோடு திரைத்துறை சார்ந்த பல விருதுகளை இளையராஜா சொந்தக்காரர்.
பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று காலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலைப் பொழுது இனிதாய் மலர.. பயணங்கள் இதமாய் அமைய.. மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற.. துன்பங்கள் தூசியாய் மறைய.. இரவு இனிமையாய்ச் சாய.. தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!" என வர்ணித்து இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி இளையராஜா என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.