சென்னை:வேளாண்மை உழவர் நலத்துறைக்கு 62 கோடி ரூபாயில் புதிய கட்டடம் மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட விவசாயிகளுக்கு 181.40 கோடி ரூபாய் நிவாரண நிதியினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 62 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் உழவர் நலத்துறை கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நில உடமையினைக் கருத்தில் கொண்டு, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் பவர்டில்லர்கள் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அறிவிப்பிற்கிணங்க, முதற்கட்டமாக சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், 35 கோடி ரூபாய் மதிப்பில் 3,907 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் 293 விவசாயிகளுக்கு விசை களையெடுப்பான் கருவிகள் என மொத்தம் 4,200 விவசாயிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை நேற்று வழங்கினார்.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தினால் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக 3 இலட்சத்து 52 ஆயிரத்து 797 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து 33% மற்றும் அதற்குமேல் பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துரையை பரிசீலித்து பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு 181 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,34,305 விவசாயிகளுக்கு 132.71 கோடி ரூபாயும், சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 25,847 விவசாயிகளுக்கு 25.77 கோடி ரூபாயும், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 17,096 விவசாயிகளுக்கு 13.85 கோடி ரூபாயும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,746 விவசாயிகளுக்கு 6.63 கோடி ரூபாயும், விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 3,220 விவசாயிகளுக்கு 2.40 கோடி ரூபாயும்,தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 61 விவசாயிகளுக்கு 4.43 லட்சம் ரூபாய், என மொத்தம் 181.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைத்திட புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் விவசாயிகளை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை ‘வேளாண்மை உழவர் நலத்துறை’ எனப் பெயர் மாற்றமும் செய்தார்.
மேலும், வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு 1,50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள், தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை கிண்டி வேளாண் தொழில்நுட்ப பசுமை பூங்காவில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்திற்கான 32 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாக கட்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தலில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய்களுக்கான இயந்திரங்களுடன் கூடிய நவீன சிப்பம் கட்டும் அமைப்பு மற்றும் சந்தை ஊக்குவிப்பு மையம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் என மொத்தம் 62 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் உழவர் நலத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் முனைவர் இரா. நந்தகோபால், இ.ஆ.ப., வேளாண்மை ஆணையர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப, வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப., வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:உதயநிதியின் 'சனாதானம்' குறித்த பேச்சுக்கு பொங்கி எழும் பாஜக - ஆதரவாக களத்தில் குதித்த கூட்டணி கட்சிகள்