சென்னை:தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். கடந்த 1957ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திரன் உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் போன்ற பொறுப்புகளை வகித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர்.
அந்த சமயத்தில், கடந்த 1964ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பின்னாளில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது, அங்கு நிகழ்ந்த புயலை எதிர்கொள்வதிலும், மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலிலிருந்தபோதும், அதன்பின்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி அமைத்த போதும், தலைமைச்செயலாளராக ராஜேந்திரன் பதவி வகித்தார்.