சென்னை:ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபன் தொடரில் 2 வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் 2,501.05 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இதன் மூலம் இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வைஷாலி சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார். செஸ் வரலாற்றில் ஒரே குடும்பத்தில் சகோதர - சகோதரிகள் கிராண்ட் மாஸ்டராக இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு அடுத்தாக 3வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இருக்கிறார் வைஷாலி. தமிழகத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக 14 வயதுகுட்டபட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு முதல் சர்வதேச செஸ் மாஸ்டராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டார் அதில் "இந்தியாவின் 3வது கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரான வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறது. உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்கள் குறிப்பிடத்தக்கப் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், நமது மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது “சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 2500 புள்ளிகளைப் பெற்று கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ள வைஷாலிக்கு வாழ்த்துகள்.செஸ் வரலாற்றில் கிராண்ட்மாஸ்டர் பட்டங்களை வென்ற முதல் உடன்பிறந்த ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது “இந்தியாவின் 84 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக செஸ் வீராங்கனை சகோதரி வைஷாலிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் மூன்றாவதாகவும், தமிழக அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ள சகோதரி மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"அடுத்த 20 ஆண்டுகளில் ஐபிஎல் ஊடக உரிமம் 50 பில்லியன் டாலரை எட்டும்" - ஐபிஎல் தலைவர் அருண் துமால்!