சென்னை:2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடந்து வருகின்றன.
2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் ஆகியன குறித்து துறை வாரியாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து துறை வாரியான ஆய்வு கூட்டத்தை முதலமைச்சர் நடத்த உள்ளதாகவும் அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் புதிய அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைகள் முடிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் நிதித் துறை அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவை கூடி, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.