சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது. அவர்கள் தங்களின் செல்போன்களை ஆப் செய்து , தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும்.
அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கி படிக்க அறிவுறுத்தவும், காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்யவும் கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் தொடக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி முடிவடைகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுதுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டில் உள்ள 12,352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் 3,976 மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர். புதுச்சேரியில் உள்ள 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7655 மாணவிகள் என 15 ஆயிரத்து 566 பேர் எழுதுகின்றனர்.
இவர்களுக்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்களும், 14 ஆயிரத்து 441 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என 37 ஆயிரத்து 798 பேர் 182 மையங்களில் எழுத உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 7,751 மாணவர்களும், 5,400 மாணவிகளும் என 13,151 பேர் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 264 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் 9 சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.