சென்னை:தமிழ்மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வின் மூலம் 2 ஆண்டுகளுக்கு மாதம் 1,500 ரூபாய் நிதியுதவி பெறுவதற்கு தேர்வுச் செய்யப்பட்ட 1,500 மாணவர்களின் பட்டியல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு தயாராகி பெருமளவில் பங்கு பெற்று வருகின்றனர். அதேபோன்று, தமிழ்மாெழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வினை எழுதலாம். 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, மாணவர்களிடம் தமிழ்மாெழி உணர்வை வளர்ப்பதற்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை 2023-24ஆம் ஆண்டிற்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்விற்கான விண்ணப்பத்தைப் பெற்று, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற்றது.
இத்தேர்வில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 910 மாணவர்கள் பங்கு பெற்றனர். இத்தேர்வில் 1,500 மாணவர்கள் (750 அரசுப் பள்ளி மாணவர்கள். 750 அரசு உதவிபெறும் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளி மாணவர்கள்) தேர்வுச் செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
எனவே, தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று தமிழ் இலக்கியத் திறனறித்தேர்வு முடிவுகள் என்ற தலைப்பின் கீழ் மாணவர் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியல் இந்த இணையதளத்திலே other Examiantion தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு பக்கத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.