சென்னை:மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், சேலையூர், அஸ்தினாபுரம், ஜமீன் ராயப்பேட்டை, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் போது சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியது. இதனால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் என பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும், சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதியில் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குடியிருப்பு பகுதியில் தேங்கி இருக்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் தேங்கி பாதிப்படைந்த பகுதிகளை மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, ஜமீன் ராயப்பேட்டை, நடேசன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பெய்த கனமழை காரணமாக மழை நீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் அழகு மீனா உத்தரவிட்டு இருந்தார்.