தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்தரவை அமல்படுத்தாத தாசில்தார்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத, கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரவை அமல்படுத்தாத தாசில்தார்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு
உத்தரவை அமல்படுத்தாத தாசில்தார்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

By

Published : Aug 3, 2022, 9:39 PM IST

சென்னை:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலாடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முருகன் என்பவர் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 2017 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. பின்னர், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஆக.3) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை 4 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாமல் இருப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்க இருக்கப்போவதாக அறிவித்தார்.

அப்போது இரண்டு நாட்களில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தனர்.

மேலும், தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக அவரை ஆகஸ்ட் 5ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்தார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு: நீதிபதியை மாற்ற கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details