சென்னை:உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக இன்றைய தினம் அமெரிக்கா புறப்பட்டுச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், 'என் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எனது உடல் நலம் பற்றி நல்லபடியாக செய்தி போட்ட ஊடகத்தினருக்கு முதல் நன்றி. இன்று செய்தியாளர்களைச் சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை. எனது பிஆர்ஓ சொன்னதன் காரணமாக இன்று நான் உங்களை சந்தித்துச் செல்கிறேன்.
நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. என் முகத்தில் தான் தாடி வைத்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது இல்லை. நான் இன்றுதான் அமெரிக்கா செல்கிறேன். அதற்கு முன்னதாகவே பல கதைகளை அடைத்து நான் அமெரிக்கா சென்றுவிட்டதாக குறிப்பிட்டார்கள். நானே ஒரு நடிகன், இயக்குநர். எனக்கே கதை எழுதி திரையிட முயற்சிக்கின்றனர்.
விதியை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த கட்சிக்காரர்கள், என் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்னுடைய விசுவாசிகளாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை சரியில்லாதபோது நேரில் வந்து என்னை சந்தித்த முதலமைச்சர், ஜி.கே. வாசன், பச்சைமுத்து, கமல்ஹாசன், ஐசரி கணேசன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் என் மீது காட்டிய அன்பிற்கு அளவே இல்லை. அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.