சென்னை:திரையுலகில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக தோற்றம் கொண்டவர் தான் டி.ராஜேந்தர். சினிமா துறையில் நுழைந்தது முதலே தனது பல வகையான திறமைகளைத் திரையில் புகுத்தி, மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தார். மேலும் தமிழ் மீதான இவரது பற்றும், அடுக்கு மொழியில் அடுக்கி எடுக்கும் இவரது வசனங்களுக்கும், தனியானதொரு ரசிகர்கள் பட்டாளத்தையே இவர் பக்கம் குவித்தது.
இந்நிலையில், இயக்குநர் டி.ராஜேந்தர் இசையமைத்து 163 மொழிகளில் உருவாக்கம் செய்யப்படுவதாக சொல்லப்பட்டு வரும் 'நான் கடைசி வரை தமிழன்' என்ற திரைப்படத்தின் பூஜை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (செப்.3) சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இப்படத்தை எம்.ஏ.ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, "கொஞ்ச நாளாக இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கென்று ஒரு குழப்பம் போய் கொண்டு இருக்கிறது. அந்த பட்டத்தை டி.ராஜேந்தரிடம் தான் கொடுக்க வேண்டும்" என்று கூறினார். அதற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் அதெல்லாம் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டது நிகழ்ச்சியில் பங்கேற்றோர் முகங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பிறகு இயக்குநர் டி.ராஜேந்தர் பேசும்போது, "நான் நேற்று வரை ஹைதராபாத்தில் தான் இருந்தேன். 'நான் கடைசி வரை தமிழன்' திரைப்படத்தின் பூஜை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா என்று சொன்னதனால் தான் வந்தேன். ராஜேந்திர சோழன் பெருமையைக் கண்டு தான், எனக்கு விஜய ராஜேந்திர சோழன் என்று பெயர் வைத்தார் எனது அப்பா” எனக் கூறிய அவர், அள்ள அள்ள குறையாத தமிழ் என்று நடைமொழியில் தனது பாணியில் பேசினார்.