தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி சாலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!

சென்னை: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி மணி அடித்து திறந்து வைத்தார்.

t-nagar

By

Published : Nov 14, 2019, 12:11 AM IST

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சென்னையில் தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீட்டர், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரை 380 மீட்டர், போக் சாலை முதல் அண்ணா சாலை வரை 564 மீட்டர் என மூன்று கட்டங்களாக நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரையும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் சில நாள்களுக்கு முன்பு முடிவடைந்தன. இதையடுத்து இந்த நடைபாதை வளாகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.

இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணி அடித்து திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் அற்புதமான அழகான நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 20 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் மிகவும் எளிதாக நடந்து செல்லவும் சாலைகளை கடந்து செல்லவும் முடியும். ஒரு அழகான உலகத்தரத்துக்கேற்ற நடைபாதையும் சாலை அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

தியாகராய நகர் ஸ்மார்ட் சிட்டி சாலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்

மேலும், "மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழ்நாட்டில் 11 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகளை செய்து வருகிறது என்றும், இந்தியாவிலேயே எட்டாவது இடமாக இந்தத் திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பிற இடங்களில் இதேபோன்று ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதற்கேற்ப நிதி ஆதாரத்தை திரட்டி, படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்து தரப்படும்" என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூரில் மரண பள்ளங்களாக காட்சி அளிக்கும் சாலைகள்

ABOUT THE AUTHOR

...view details