தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு கெடுபிடி.. சுங்கத்துறையினரின் கட்டுப்பாடுகளால் பயணிகள் அதிருப்தி! - news in tamil

Chennai airport customs: சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் திருப்பதி லட்டு, தீபாவளி பலகாரங்கள், லுங்கி, புடவை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு தடை..சுங்கத்துறையினர் கெடுபிடி!
சென்னை விமானநிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு தடை..சுங்கத்துறையினர் கெடுபிடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 8:12 AM IST


சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே லுங்கி, புடவைகள் போன்றவற்றில் தங்கம் வைத்து கடத்தப்படுத்துவாத தொடர் புகார் எழுந்ததால், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வெளிநாடுகள் சென்றால் ஸ்வீட் கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். சிலர் தாங்களே கொண்டு செல்வார்கள், மற்றும் சிலர் வெளிநாடு செல்லும் உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து, அங்கு இருக்கும் உறவினர்கள் நண்பர்களிடம் கொடுக்கச் சொல்லி அனுப்புவார்கள். பண்டிகை காலங்களில் இது வழக்கமான ஒன்று என்பதால், சுங்கத்துறையில் அதை அதிகமாக கண்டு கொள்வதும் இல்லை.

இனிப்புகளுக்கு தடை:இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து குறிப்பாக சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் ஸ்வீட் பாக்ஸ்கள் எடுத்துச் செல்ல திடீரென சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் தடை விதித்துள்ளனர். சுகாதாரச் சீர்கேடு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்வீட் பாக்ஸ்கள் எடுத்துச் செல்வதை தடை விதிக்கிறோம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுப்படுகிறது.

மேலும், பண்டிகை கால ஸ்வீட்களுக்கு மட்டுமின்றி, திருப்பதி கோயில் லட்டு மற்றும் கோயில் பிரசாதங்களான இனிப்புகள் எடுத்துச் செல்லவும் சுங்கத் துறையினர் தடை விதித்துள்ளதால் பயணிகள் பெரும அதிருப்தியை அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் பாங்காங்கில் இருக்கும் உறவினர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக கடந்த வாரம் 4 பேர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது, சுங்கத்துறையினர் அவர்களின் உடமைகளை சோதித்து, அவர்கள் கொண்டு செல்லவிருந்த ஸ்வீட் பாக்ஸ்கள் எடுத்துச் செல்ல கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள், சென்னையில் இருந்து பாங்காக் செல்லவிருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றுள்ளனர். பின், மும்பையில் இருந்து பாங்காக் விமானத்தில், அதே ஸ்வீட் பாக்ஸ்களுடன் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் ஆயுத பூஜை விழாவை கொண்டாடி முடித்துவிட்டு, விமானத்தில் சென்னை திரும்பிய அவர்கள், சுங்க சட்டம் இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம்தான் என்றும், மும்பை விமான நிலைய சுங்கத்துறை, ஸ்வீட் பாக்ஸ்கள் எடுத்துச் செல்ல அனுமதித்தனர் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

லுங்கி, நைட்டிகள் தடை:இதற்கிடையே இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானங்களில், அவர்களின் உறவினர்கள் நண்பர்களுக்கு லுங்கி, நைட்டி, வேஷ்டி, காட்டன் புடவைகள் போன்றவைகள் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் சென்னை விமான நிலையத்தில், தற்போது வெளிநாடு செல்லும் பயணிகள் குறிப்பாக இலங்கைக்குச் செல்லும் பயணிகள் லுங்கி, நைட்டி, காட்டன் புடவைகள், வேஷ்டிகள் எடுத்துச் செல்ல சுங்கத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

பயணிகள் அவதி:இதனால் பயணிகள் திருச்சி, பெங்களூரு சென்று அங்கிருந்து விமானங்களில் இலங்கை செல்கின்றனர். இந்த கெடுபிடிகளால் பயணிகள் சென்னை விமான நிலையங்களில் இருந்து பயணிப்பதை தவிர்த்து விட்டு, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர் என கூறுகின்றனர்.

சுங்கத்துறையினர் கூறுவது என்ன? இது பற்றி சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, சுங்க சட்ட விதிகளின்படி நாங்கள் செயல்படுகிறோம், விதிமுறைகளுக்கு மாறாக நாங்கள் செயல்படவில்லை. மற்ற விமான நிலையங்களில் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க:மாலத்தீவில் 12 இந்தியர்கள் கைது; மாலத்தீவுக்கும் இந்திய அரசுக்கும் பிரிவினையா? இதன் வெளிப்பாடே மீனவர்கள் கைதா? மீனவர் கூறுவது என்ன..!

ABOUT THE AUTHOR

...view details