தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேச துரோக வழக்கு: சிறைத் தண்டணை நிறுத்தி வைத்து உத்தரவு!

சென்னை: தேச துரோக வழக்கில் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jul 18, 2019, 10:17 PM IST

vaiko

2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதைமன்றத்தில் நடைபெற்ற 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்துவிட்டதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, வைகோ மீது தேச துரோகம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஜூலை 5ஆம் தேதி உத்தரவிட்டார். வைகோ தரப்பில் முறையீடு செய்யப்பட்டதால் நான்கு வாரங்களுக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து அப்போதே நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. காவலர்களைத் தவிர பொது மக்கள் ஒருவர்கூட சாட்சிகளாக சேர்க்கப்படவில்லை. போதுமான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், போதுமான சாட்சிகள் இல்லை என்றாலும், மனுதாரரே தான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக சாட்சியம் அளித்துள்ளார் . மேலும், அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசியதால் தேச துரோக வழக்கு போடப்பட்டது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கருத்து சுதந்திரம் இருப்பதற்காக எதையும் பேசக்கூடாது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். சம்பவம் நடைபெறும் சூழ்நிலையை வைத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு வழக்குப்பதிவு செய்தால் சரியாக இருக்காது. நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஒரு ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details