சென்னை: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(ஜூன் 20) வெளியிடப்பட்டன. அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, மாணவர்களின் தற்காெலையைத் தடுக்கும் வகையில் தன்னம்பிக்கை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என கூறினார். மேலும் மாணவர்கள் 14,417 என்ற எண்ணில் தொடர்புகாெண்டு ஆலோசனை பெறலாம் எனவும் அறிவித்தார்.
இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் பல இடங்களில் மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வாரியாக நடைபெற்றச் சம்பவங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை தகவல்களை திரட்டியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 பேரும், சேலம் மாவட்டத்தில் 2 பேரும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர் ஆகிய 14 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவர்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும் என 11 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 11 மாணவர்களும், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 மாணவர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மாணவர்களும், சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் என, 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
அவர்களில் 16 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதும், 12 மாணவர்கள் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் கல்வித்துறை திரட்டிய தகவல்கள் மூலம் வெளிவந்துள்ளன. தேர்வுகளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.