தருமபுரி: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதில், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு பொதுமக்கள், கரும்பு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பொங்கல் பண்டிகையின்போது சாப்பிட பயன்படுத்தப்படும் இந்த கரும்பிலிருந்து வெல்லம் தயாரித்தால் உற்பத்தி குறைவாக கிடைக்கும் என்பதால், இதை சர்க்கரை ஆலைக்கும் அனுப்ப முடியாது என்று தருமபுரி மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.