சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப். 12ஆம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் 27ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிருவரும் ஜாமின் கோரி தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால், அம்மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இருவரது தரப்பில் மீண்டும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதி கார்த்திகேயன் இன்று விசாரித்தபோது, 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும் எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்ற அவர்கள் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக இரு நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டதே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என, அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். அதற்கு குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயகோபாலுக்கும் மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஆலந்தூர் நீதிமன்றத்திலிருந்து சம்மன் வரும்வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும், சம்மன் பெற்ற பின் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஜெயகோபால் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி ஜெயகோபாலுக்கு நிபந்தனை விதித்தார்.
மேகநாதனைப் பொறுத்தவரை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளைக் கொன்றுள்ளீர்கள்’ - ஜெயகோபாலுக்கு நீதிமன்றம் கண்டனம்