இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க முடிவாகி இருந்தது. இதுதொடர்பாக, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முத்தையா முரளிதரனே, விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்து விலக வேண்டும் எனக் கோரிக்கைவைத்திருந்தார். அதனை ஏற்று விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இலங்கை வாழ் தமிழர்கள், பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகளைப் பதிவுசெய்திருந்தனர். எனினும், குறிப்பிட்ட ஒரு நபர் விஜய் சேதுபதி மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில், ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இதுதொடர்பாக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் குமரன் சென்னை காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரின் ஐபி முகவரி உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்தனர்.
அப்போது, அது இலங்கையிலுள்ள ஐபி முகவரி எனத் தெரியவந்தது. இதனையடுத்து, வெளிநாட்டிலுள்ள ஒரு நபரைப் பிடிப்பதற்காக, இன்டர்போல் உதவியை சென்னை காவல் துறையினர் நாடினர்.
அந்த வகையில் சென்னை ப்ளூ கார்னர் நோட்டீஸ் தயார்செய்து, அந்த நபரைப் பிடிப்பதற்கு திட்டமிட்டிருந்தனர்.