சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளன. இதற்குக் குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைவதை அதிகளவில் குறைக்கவும், அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தோல்வி அடையாமல் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து புதிய நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதற்காகப் பாட வாரியாக முக்கியமான பாடப்பகுதிகளைச் சுருக்கமான அளவில் தொகுத்து, பயிற்சி கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடிவாரியாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பத்தாம் வகுப்பு கணக்கு, சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு நடைபெற்றது.