சென்னை:கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து, 2020-21 கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. இதற்கிடையில் கரோனா அச்சுறுத்தல் சிறிது சிறிதாக குறைந்த நிலையில் நவம்பர் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே, அரசு தனது முடிவை ஒத்திவைத்தது.
தொடர்ந்து ஜனவரி 6,7ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், பொதுத்தேர்வு எழுத உள்ள சுமார் 19 லட்சம் மாணவர்களுக்காக இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக 3.84 கோடி வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளியில் வகுப்புகள் தொடங்கும் முதல் நாளான இன்று மாணவர்களுக்கு அந்த மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.
மேலும், பள்ளி வளாகங்களில் தகுந்த இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கட்டாயமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே உணவு பரிமாற்றம் கூடாது, சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றவும், அவற்றை பள்ளிகள் கண்காணிக்கவும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
உற்சாகமாக பள்ளி திரும்பிய மாணவர்கள் இந்நிலையில், சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். முகக்கவசம் இல்லாத மாணவர்களுக்கு முகக்கவசங்களையும் வழங்கினர். மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டு வகுப்பறைகளுக்கு அனுப்பப்பட்டனர். 25 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் கூடுதல் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதி கூறினார்.
பள்ளியில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களின் வருகை குறித்தும் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கூறும்போது, "பள்ளிகளில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களை கொண்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், மாணவர்கள் கூட்டமாக இருப்பதை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை ஆசிரியர்கள் குழு கண்காணிக்கும். நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகளுக்கு வந்துள்ளதால் மாணவர்களுக்கு முறையான ஆலோசனைகளை ஆசிரியர்கள் மூலமாக வழங்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா கூறுகையில், "ஒவ்வொரு பள்ளியிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களுக்கு மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாதவாறு தகுந்த இடைவெளியை கடைபிடித்தல், சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய இந்த குழுக்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி - தமிழ்நாடு அரசு