சென்னை:சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், மிகக்குறைந்த கல்விக் கட்டணத்தில் தங்களது ஆய்வுப் பட்டத்தை நிறைவுசெய்து வருகின்றனர். இங்கு முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகச் சூழலிலிருந்து வரக்கூடியவர்கள். இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவால் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கான கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என ஆராய்ச்சி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஆராய்ச்சி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் துணை வேந்தரைச் சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளனர். ஆராய்ச்சி பட்டபடிப்பினை மேற்கொள்ளும் மாணவர் விக்னேஷ்வரன் கூறும்போது, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டதாகச் செய்தி வெளியாகியது. அது தொடர்பாக விளக்கம் கேட்டு மாணவர்கள் இங்குக் கூடியிருக்கிறோம். மேலும், பல்கலைக் கழகம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மனு அளிக்கவுள்ளோம்.
உயர்த்தப்பட்ட கட்டணம் குறித்து துணை வேந்தரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்த விதமான கட்டணமும் உயர்த்தப்படவில்லை என கூறியிருக்கிறார். இதனால், முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாங்கள் மனு அளித்த விளக்கம் கேட்க இருக்கிறோம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ஏற்கனவே விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் இருந்தது.