சென்னை:இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இந்த நிகழ்வை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இது இந்தியாவின் பெரிய சாதனை மைல்கல்லாக அமைந்து உள்ளது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சியைக் காண்பதற்கு பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு களித்தனர்.
அதேபோல் தாம்பரம் அருகே சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் படித்த தாம்பரம் தனியார் கல்லூரியில் விக்ரம் லேண்டர் நிலவில் தர இருக்கும் நிகழ்வை பெரிய திரையில் ஒளிபரப்பு செய்துள்ளனர். இதில் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இதையடுத்து லேண்டர் நிலவில் தரையிறங்கியதும் கல்லூரி மாணவ,மாணவிகள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். இதையடுத்து தாய் மண்ணே வணக்கம் பாடலை ஒலிக்க செய்து அனைவரும் நமது நாட்டின் தேசிய கொடியை அசைத்து மகிழ்ந்தனர். மேலும் கல்லூரி வளாகத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.