தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டையில் தம்பியை கழுத்தறுத்து கொன்ற அண்ணன்! - police station

விழுப்புரம்: தம்பியை கொலை செய்த அண்ணணை, காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் கைது செய்தனர்.

தம்பியை கொலை செய்த அண்ணணை, காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

By

Published : Aug 2, 2019, 4:44 AM IST

Updated : Aug 2, 2019, 6:36 AM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி.

இவர்களது மூத்த மகன் சரத்குமார்(21). கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தார். இளைய மகன் சிவக்குமார்(15). இவர் எலவனாசூர் கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், காப்புக்காடு வனப்பகுதியில் சிவக்குமார் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த எலவனாசூர் கோட்டை போலீசார், கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்தனர். அதன்பின், தனிப்படை போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

மர்ம நபர்கள் யாராவது மாணவன் சிவக்குமாரை கொன்று காட்டில் வீசிசென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. கொலை நடந்த இடத்தில் இருந்து சென்ற மோப்ப நாய், சிவக்குமாரின் வீட்டில் வந்து நின்றது. எனவே சிவக்குமாரின் தாய் பராசக்தி, அண்ணன் சரத்குமார், பாட்டி பாலாயி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த ஒரு கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.

எனவே மாணவனின் வீட்டில் உள்ளவர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் உறுதி செய்தனர். அதன்படி அங்கு முகாமிட்ட தனிப்படை போலீசார், அந்த குடும்பத்தினரின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் சகோதரர் சரத்குமார் மீது சந்தேகம் வலுத்தது.

உடனே சரத்குமாரை தனிப்படை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில் சரத்குமாருக்கும், அவரது தம்பி சிவக்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சிவக்குமாரை தீர்த்துக்கட்ட சரத்குமார் முடிவு செய்தார்.

சிவக்குமாருக்கு முயல் வேட்டையில் அதிக ஆர்வம் உண்டு என்பதால் ஞாயிற்றுக்கிழமையன்று அவர் வீட்டில் இருந்தார். எனவே இதுதான் கொலை செய்ய தக்க சமயம் என்று சரத்குமார் தீர்மானித்தார். பின்னர் தனது தம்பி சிவக்குமாரிடம், இருவரும் முயல் வேட்டைக்கு செல்வோம் என்று கூறினார். இதையடுத்து சிவக்குமார் சென்றார்.

காப்புகாடு பகுதியில் அடர்ந்த புதர் மண்டி கிடக்கும் பாறை இடுக்கு பகுதியில் சிவக்குமாரை முயலை பிடிக்க கண்ணி வைக்குமாறு சரத்குமார் கூறினார். உடனே சிவக்குமார் கீழே இறங்கி கண்ணி வைத்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சரத்குமார், தனது தம்பி என்று கூட பாராமல் பட்டாக்கத்தியால் சரமாரியாக சிவக்குமாரை வெட்டினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவக்குமாரை காணவில்லையே என்று தாய் பராசக்தி கேட்டதற்கு, அவன் முயல்வேட்டைக்கு சென்றுள்ளான் என்று சரத்குமார் கூறியுள்ளார். பின்னர் உறவினர்களுடன் சென்று எதுவும் தெரியாதது போல் ஆட்களுடன் தேடி உள்ளார்.

காட்டு பகுதியில் சிவகுமாரின் உடலை பார்த்து சந்தேகம் வராதபடி தனது தாயாருடன் கதறி அழுது துடித்து உள்ளார். ஆனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் சரத்குமார் சிக்கி கொண்டார். இதைத்தொடர்ந்து சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Last Updated : Aug 2, 2019, 6:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details