மின் கட்டணம் தொடர்பான சந்தேகம், மு.க. ஸ்டாலின் விமர்சனம் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் தங்கமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரோனா பாதுகாப்பு நடவடிக்கை
கரோனா நோய்த்தொற்று தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்ததன் காரணமாக நாட்டிலேயே, தமிழ்நாட்டில் தான் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் விழுக்காடு அதிகமாகவும், இறப்பு விகிதம் மிகக்குறைவாகவும் இருந்துவருகிறது.
அரசு, தமிழ்நாட்டு மக்களை தொற்றிலிருந்து மீட்கும் பணியில் நேர்மையுடனும், துணிவுடனும், எந்தவித சமரசமும் இன்றி, மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சந்தர்ப்ப அரசியல்
மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை என தற்போது கூறும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முந்தைய திமுக ஆட்சியின் மெத்தனத்தால் நிலவிய கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழ்நாடே இருளில் மூழ்கி இருந்ததை மறந்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து அரசு கடந்த 10 ஆண்டுகளாக எடுத்துவரும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளால் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் தரமான மின்சாரம் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு தொடர்ந்து மின்மிகை மாநிலமாகவும் திகழ்ந்து வருகின்றது.
மின்கணக்கீடும் பணி
கரோனா தொற்று பரவாமல் இருக்கத்தான், ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நடைமுறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் வீடுதோறும் சென்று மின் கணக்கீடு செய்யவில்லை.
அதற்கு பதில், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் (LT Service), தங்களுடைய ஜனவரி-பிப்ரவரி மாத கணக்கீட்டு பட்டியலின்படி, மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டது. தற்போது, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கணக்கீடு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்த மின் அளவீடு 4 மாதங்களுக்கு உள்ள மின் பயன்பாடு என்பதால்:
நான்கு மாத காலத்திற்கான மின் நுகர்வு, இரண்டு மாதங்களுக்கான (bi-monthly) வீதப்பட்டி அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. - அந்த மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கணக்கீடு செய்யும்பொழுது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு முதல் கொண்டு வந்த 100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளருக்கும் வழங்கிய பின்பு கணக்கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச்-ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது.