தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சி உங்களாட்சி-1: இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு உருவான கதை! - உள்ளாட்சி உங்களாட்சி

சுதந்திர இந்தியாவுக்கான காந்தியின் கனவுத்திட்டமான கிராம சுயாட்சி, ஜவஹர்லால் நேருவின் ஆட்சியில் அமைக்கப்பட பல்வந்த் ராய் மேத்தா குழு மூலம் உருபெற்று, ராஜிவ் காந்தியால் இறுதி வடிவம் பெறப்பட்டு, 1992ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் ஆட்சியில் அரசியல் சட்டவடிவம் பெற்றது.

Local body election

By

Published : Nov 5, 2019, 9:36 AM IST

Updated : Nov 6, 2019, 7:21 AM IST

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு உருவான கதை

1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட 73ஆவது அரசியல் சாசன சட்டத்திருத்தம், சுதந்திர இந்திய வரலாற்றில் மைல்கல்லாகக் கருதப்படுகிறது. காந்தியின் கனவான கிராம சுயாட்சி முறையை சட்டப்பூர்வமாக நனவாக்கும் பயணத்திற்கான முக்கிய நகர்வாக அமைந்தது இந்த 73ஆவது சட்டத்திருத்தம்.

'இந்தியாவின் ஆன்மாவானது கிராமங்களிலேயே உள்ளது, கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு' என்று நம்பியவர் காந்தி. இன்று இந்தியாவின் மூன்றின் இரண்டு பங்கு பகுதி கிராமப்புறத்தைச் சார்ந்ததாக உள்ளது. இந்தக் கிராமங்கள் வளர்ச்சி பெறாமல் இந்தியாவின் வளர்ச்சி முழுமையடையாது. இந்த வளர்ச்சி சாத்தியப்பட கிராமங்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும். அதிகாரத்தின் மூலம் கிராமங்கள் தங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வலிமையைப் பெற்று கிராமிய சுயாட்சி முறை உருவாக வேண்டும் என்பதே காந்தியின் கனவாகும்.

கிராமங்களைத் தேடி பயணித்த காந்தி

இதை இந்திய ஜனநாயகத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கு அரசியல் அமைப்பின் பாதுகாப்பையும் அளித்ததே இந்த 73ஆவது சட்டத்திருத்தம். 1950களில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு, இந்திய குடியரசான பின்பு 43 ஆண்டுகால நெடும் பயணத்திற்குப் பின்னரே பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 1957ஆம் ஆண்டு தொடங்கி மொத்தம் எட்டு குழுக்குள் இந்தத் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

1957ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்வந்த் ராய் மேத்த குழு 'ஜனநாயக பரவலாக்கம்' என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த கருதுகோளை முன்வைத்து மத்திய அரசுக்கு தனது அறிக்கையை அளித்தது. பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிப்படை சாரம்சங்கள் இந்தக் குழுவியின் பரிந்துரைகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புக்கு அடித்தளமிட்ட பல்வந்த் ராய் மேத்தா

1957ஆம் ஆண்டு பல்வந்த் ராய் மேத்தா குழுவிற்குப்பின் வி.டி. கிருஷ்ணமாச்சாரி குழு, தாகத்மால் ஜெயின் குழு, அசோக் மேத்தா குழு, ஜி.வி.கே. ராவ் குழு, எல்.எம். சங்வி குழு, பிகே துங்கோன் குழு, மோகிந்தர் குழு என எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.

சட்டப்பூர்வமாக முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, சுதந்திர இந்தியாவின் முதல் பஞ்சாயத்து அமைப்பானது சோதனை முயற்சியில் ராஜஸ்தான் மாநிலம் நகவுர் பகுதியில் தொடங்கப்பட்டது. 1959ஆம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நகவுரில் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்த அன்றைய பிரதமர் நேரு, சுதந்திர இந்தியாவின் புரட்சிகரமான வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு இது எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நேருவுடன் நரசிம்ம ராவ்

அதன் பின்னர் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக இந்த அமைப்பானது உருவாக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை உருவாக்கிய ஜனதா கூட்டணி அரசு பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை தீவிரப்படுத்த அசோக் மேத்தா குழுவை உருவாக்கியது. ஜனதா கூட்டணி உருவாகக் காரணமாக இருந்த காந்தியவாதி லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாரயணன் இந்த முன்னெடுப்புக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

இதற்கு இறுதி வடிவம் தரும்விதமாக 1985ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி ஜி.வி.கே., எல்.எம். சங்வி குழுக்களை அமைத்தார். இந்த இரு குழுக்களின் பரிந்துரைகளின்படி 1989ஆம் ஆண்டு பிரதமர் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். மக்களவையில் நிறைவேறிய போதிலும், மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லாத காரணத்தால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இந்த சட்டத்திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி

அதன்பின்னர், நரசிம்ம ராவ் தலைமையிலான அதே காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசு 1992ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 73ஆவது சட்டத்திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் மக்கள் பிரதிநிதித்துவத்தில் பட்டியலின மக்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்துள்ளது மிக முக்கியமான அம்சமாகும்.

'அதிகாரம் மக்களுக்கே' என்ற முழக்கத்துடன் பஞ்சாயத்து ராஜ் திட்டம் இறுதி வடிவமெடுக்க சூத்திரதாரியாகத் திகழ்ந்த ராஜிவ் காந்தி, 'இந்த மாபெரும் புரட்சி மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் வீட்டு வாசலுக்கு மக்களாட்சி சென்றடையும்' என்றார் பெருமிதத்துடன்! ஆம் சுதந்திரத்துக்கு முன்னர் காந்தி கண்ட கிராம சுயாட்சி கனவு, ராஜிவ் காந்தியின் திடமான முயற்சியால் அரசியல் சட்டவடிவம் பெற்று இந்திய ஜனநாயகத்தின் பெருமைக்குரிய அம்சமாக விளங்கிவருகிறது.

கிராம சுயாட்சி கனவு கண்ட காந்தி

இதையும் படிங்க: வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை!

Last Updated : Nov 6, 2019, 7:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details