தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சோஷியல் டிஸ்டன்ஸ்' காலத்தின் அவசியம்: சுதா சேஷையனின் நுட்பமான விளக்கம்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துவருகின்றனர். அந்த ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்றால் என்ன? என்பது குறித்து எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் விளக்கும் விரிவான கட்டுரை இதோ...

story-about-social-distance
story-about-social-distance

By

Published : Mar 28, 2020, 11:43 PM IST

Updated : Mar 30, 2020, 8:01 AM IST

கடந்த பதினைந்து நாள்களாகப் பலரும் உச்சரிக்கும் ஒரு சொற்றொடர்–சோஷியல் டிஸ்டன்சிங்; அதாவது, சமூகச் சேய்மைப்படுத்தல் (Social distancing). கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ கடைப்பிடிக்க வேண்டும் என்று வல்லுநர்களும் அரசுகளும் வலியுறுத்திவருகின்றன.

‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது என்ன?

மிகுதியான தொற்றுத்தன்மை கொண்ட ஒரு நோய், வேகமாகப் பரவுவதைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும், மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் சில வழிமுறைகளைச் செயல்படுத்துவார்கள். இத்தகைய வழிமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுப் பெயர்தான் ‘சமூகச் சேய்மை’ என்பதாகும்.

மனிதர்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடும்போதோ குவியும்போதோ, தொற்றுக் கிருமிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரே இடத்தில் எல்லோரும் இருந்தால், ஒரே நேரத்தில் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று நாம் சில சமயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப்போல், கிருமிகளும் மகிழ்ச்சி கொள்ளும்.

‘சோஷியல் டிஸ்டன்சிங்

ஒரே நேரத்தில் பலரையும் பீடித்துக்கொள்ளும். இந்தப் பீடிப்பையும் பாதிப்பையும் தடுக்கத்தான் தொற்று இருக்கிற ஒருவரிடமிருந்து, தொற்று இல்லாத ஒருவருக்கு அது பரவிவிடக்கூடாது என்பதற்காக ‘சமூகச் சேய்மை’ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கொள்ளை நோய் ஒன்று, வெகு வேகமாகப் பரவி, பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, சமூகச் சேய்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். மருத்துவர்களும் சுகாதார வல்லுநர்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பலகாலும் மேற்கொண்டுள்ளனர்.

இளம்பிள்ளை வாதம்

1916ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டைப் போலியோ நோய் (இளம்பிள்ளை வாதம்) தாக்கியது. அமெரிக்கா முழுவதும் ஏறத்தாழ 6000 குழந்தைகளும், நியூயார்க் நகரில் மட்டும் ஏறத்தாழ 2000 குழந்தைகளும் மரணத்தைத் தழுவினர். ஏராளமான குழந்தைகளின் கை, கால்கள் செயலிழந்தன.

போலியோ

நோய்ப் பரவலைக் குறைப்பதற்காகத் திரை அரங்குகள் மூடப்பட்டன. பூங்காக்கள், நீச்சல் குளங்கள், கடற்கரைகள் ஆகிய மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாமென்று குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டனர்.

இன்ஃப்ளுயன்சா

1918-1919ஆம் ஆண்டில், பறவை மரபணுக்களைக் கொண்ட வைரசால் தோற்றுவிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்சா, உலகம் முழுவதும் கொள்ளை நோயாகப் பரவியது. 1917ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்திலும் 1918ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் முதன்முதலாகக் காணப்பட்ட இந்நோய், 1920ஆம் ஆண்டுவரை உலகை ஆட்டிப் படைத்தது.

முதல் உலகப் போர் காலகட்டமாதலால், உலகின் பல நாடுகளிலும் ராணுவக் குழுக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதனால், நோய் பரவுவதும் வேகமாக நிகழ்ந்தது.

போர்க்கால தணிக்கைகளின் காரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடக்கத்தில் அவ்வளவாக வெளிவரவில்லை. ஸ்பெயின் நாடு நடுநிலை வகித்தது. இந்நாட்டில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தைப் பத்திரிகைகளில் வெளியிட எந்தத் தணிக்கையும் இல்லை என்பதாலும், ஸ்பெயின் அரசர் பதின்மூன்றாம் அல்ஃபோன்சோ நோயினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார் என்பதாலும் இதற்கு ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ (Spanish Flu) என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது.

1918-19ஆம் ஆண்டு இன்ஃப்ளுயன்சா தாக்கத்தின்போது, அமெரிக்காவின் இரண்டு நகரங்களில் நிகழ்ந்தவற்றை எண்ணிப் பார்த்தால், சமூகச் சேய்மையின் முக்கியத்துவம் புரியும். இந்தச் சமயத்தில், ஃபிலடெல்ஃபியா நகரில் பேரணி ஒன்றும் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

அடுத்த மூன்றே நாள்களில், அந்நகரின் அனைத்து மருத்துவமனைகளும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பிவழிந்தன. ஒரே வாரத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி, 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சமூகச் சேய்மை

இதே காலகட்டத்தில், மிஸிஸிப்பி நதிக்கரையிலுள்ள செயிண்ட் லூயி நகரத்திலும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு தொடங்கியது. விழித்துக் கொண்ட நகர நிர்வாகம், கடுமையான சமூகச் சேய்மை முறைகளைச் செயல்படுத்தியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளும் பொழுதுபோக்குச் சாலைகளும் மூடப்பட்டன.

சமூகச் சேய்மை

மக்கள் கூடுகிற வாய்ப்பு இருந்த அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. இறுதி ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. விளைவு? ஃபிலடெல்ஃபியாவின் துயரங்கள் மீண்டும் நிகழாமல், செயிண்ட் லூயி நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.

ஆசிய ஃப்ளூ

சமூகச் சேய்மை நடவடிக்கைகள் பலகாலமாக செயல்படுத்தப்பட்டுவருகின்றன என்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக உணர்ந்தது, 1957-58 ஆண்டுகளின் ஆசிய ஃப்ளூ (Asian Flu) கொள்ளை நோயின்போதுதான் எனலாம்.

1957 ஃபிப்ரவரியில், தென்கிழக்கு ஆசியாவில், புதிய வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் நோய் தொடங்கியது. முதன்முதலாகச் சிங்கப்பூரில் காணப்பட்ட இந்நோய், இரண்டு மாதத்தில் ஹாங்காங்குக்கும், ஆசிய நகரங்கள் பலவற்றுக்கும் பரவி, அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவின் கடலோர நகரங்கள் அனைத்தையும் பீடித்து, உலகம் முழுவதிலும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துபோகக் காரணமானது.

சோஷியல் டிஸ்டன்சிங்

இந்த நோய் பரவிய விதத்தை வல்லுநர்கள் கூர்ந்து கவனித்தனர். மாநாடுகள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்கள் கூட்டம் அதிகப்பட்டதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் நோய் பரவலும் அதிவேகமானது. பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக்கூடி, அருகருகே இருந்த குழந்தைகள் மிகுதியும் பாதிக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட முன் அனுபவங்கள் இருப்பதால்தான், கொள்ளை நோய்க்காலங்களில், சமூகச் சேய்மை என்பதை வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். கொள்ளை நோய் ஒன்று பரவத் தொடங்கிவிட்டது என்றால், மருந்துகளை வீசம் வீசமாகப் பயன்படுத்தியோ, கிருமி நாசினிகளை லிட்டர் லிட்டராகக் கொட்டியோ, மருத்துவமனைகளைப் புதிது புதிதாகக் கட்டியோ அதனைத் தடுத்துவிட முடியாது.

கொள்ளை நோய்த்தடுப்பு

கொள்ளை நோய்த் தடுப்பில், மூன்று முக்கிய செயல்பாடுகள் உண்டு. அவை:

  1. சமூகச் சேய்மை (Social Distancing),
  2. தனிமைப்படுத்தல் அல்லது தனித்திருப்பு (Isolation),
  3. தடுப்பொதுக்கம் (Quarantine).

மாணவர்கள் பலர் கூடுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளை மூடுதல், அதிக நபர்கள் தொடர்புகொள்வதைத் தடுக்கும்வகையில் நூலகங்களை மூடுதல் அல்லது நூலகங்களில் அமர்ந்து வாசிக்காமல் நூல்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அகன்றுவிடுதல், அங்காடிகளிலும் சந்தைகளிலும் கூட்டம் கூடாத வகையில் நெறிப்படுத்துதல் அல்லது இணையவழி வழங்கல், நிறுவனங்களும் அலுவலகங்களும் கூட்டங்கள் நடத்தாமல் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாகத் தொடர்பு ஏற்படுத்துதல், திருவிழா-பண்டிகைக் கூட்டங்களைத் தவிர்த்தல் ஆகிய யாவும் சமூகச் சேய்மையின் பல்வேறு நடைமுறைகளாகும்.

குழந்தைகள் காப்பகங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் ஆகியவை மூடப்படுதலும் இவற்றில் அடங்கும். நிறைய பேர் பயணிக்கும் போக்குவரத்து முறைகளை நிறுத்துதலும், பலர் கூடுகிற வாய்ப்பு கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தடுத்தலும்கூட சமூகச் சேய்மையின் அடிப்படையிலாகும்.

உற்று நோக்கினால், மீதமுள்ள முறைகளான தனித்திருப்பு, தடுப்பொதுக்கம் ஆகியவற்றின் அடிப்படையும் சமூகச் சேய்மையேயாகும் என்பதை உணரலாம். தனித்திருப்பு அல்லது தனிமைப்படுத்துதல் (Isolation) என்பது ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படும்போது செய்யப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவரைத் தக்கவகையில், மருத்துவமனையிலோ, மருந்தக மையங்களிலோ, வீட்டிலோ தனிமைப்படுத்தலாம்.

தனித்திருப்பு

தடுப்பொதுக்கம் (Quarantine) என்பது ஒருவர் தொற்றுக்கு வெளிப்பட்டு (exposed to infection / infected), ஆனால், நோய்வாய்ப்படாத நிலையில் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இவர் தொற்றுக்கு வெளிப்பட்டிருப்பதால், இவருக்கும் நோய் தோன்றக்கூடும். அல்லது, நோய்வாய்ப்படவில்லையாயினும், நோய்க் கிருமிகள் இவருக்குள்ளிருந்து பிறருக்குச் செல்லக்கூடும்.

எனவே, பிறருக்குப் பாதகம் ஏற்படாத வகையில், இவர் ஒதுக்கம் செய்யப்படுகிறார். எந்த நடைமுறையாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் அணுக்கம் கொள்ளாமல், எட்டி இருப்பதுதான் இவற்றின் அடிப்படை என்பதை உணரலாம். இவ்வாறு எட்டி இருப்பதைத்தான் சமூகச் சேய்மை என்றழைக்கிறோம்.

கோவிட்-19

இப்போதைய கோவிட்-19 நோயைப் பொறுத்தவரை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஆனால், நோய்வாய்ப்படாமல், நோயின் அறிகுறி எதையும் வெளிக்காட்டாமல் இருப்பவரிடமிருந்தும், வைரஸ் கிருமிகள் உதிர்கின்றன (virus shedding). இப்படிப்பட்டவரின் இருமல்-தும்மல் துளிகள், உமிழ்நீர், சளி போன்றவற்றில் கிருமிகள் காணப்படுகின்றன. இதைத்தான், ‘இவர் வைரஸ் துகள்களை உதிர்க்கிறார்’ (He sheds the viral particles) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

நோய்வாய்ப்பட்டவரும் வைரசை உதிர்க்கிறார். நோய் அறிகுறியில்லாமல், ஆனால், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரும் வைரசை உதிர்க்கிறார். சொல்லப்போனால், நோய்வாய்ப்படாமல் வைரசை உதிர்ப்பவரால்தான் அபாயம் அதிகம். இதனாலேயே, இப்படிப்பட்டவர்களை, மிகுபரப்பாளர்கள் (Super spreaders) என்றழைக்கிறோம்.

கோவிட்-19

கல்வி நிலையங்களையும் அலுவலகங்களையும் மூடி, தேர்வுகளைத் தள்ளிப் போட்டு, நிதி நிலைமை, வருவாய் வழிமுறைகள் சீர்குலைந்தாலும் பரவாயில்லை என்று ஊரடங்கு உத்தரவிட்டிருப்பதெல்லாம், சமூகச் சேய்மைக்காகவே!

வீட்டில் யாருக்காவது அம்மை போட்டுவிட்டால், வேப்பிலைக் கொத்தை வாசலில் சொருகிவைத்து, பிறரை வரவிடாமல் சேய்மைப்படுத்தி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் நம்முடைய முன்னோர்.

21 நாள்கள்!

சமூகச் சேய்மை என்பது யாரையோ எதற்கோ ஒதுக்குவதல்ல. ‘21 நாள்கள் எப்படி வீட்டிலேயே முடங்குவது?’ என்னும் கூக்குரல்களும், ‘இப்படியெல்லாம் சோம்பேறியாக இருந்து தூங்கி எனக்குப் பழக்கமில்லை’ என்னும் ஒப்பாரிகளும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கான அறிகுறிகள்.

அவசியமான பொருள்களைத்தானே வாங்கப் போகிறோம் என்று அம்மாவும் அப்பாவும் பிள்ளையுமாகச் சென்று, அங்காடியில் முண்டியடித்து அரிசியோ, பருப்போ, தக்காளியோ வாங்குவதெல்லாம் கரோனாவுக்கு நாம் கட்டும் வரவேற்புத் தோரணங்கள். வீட்டிற்குள் தங்குவது என்பது சோம்பேறித்தனமோ தூங்குமூஞ்சித்தனமோ இல்லை. செய்வதற்கு எவ்வளவோ உண்டு; கண்களையும் மனத்தையும் திறந்து வைத்துக்கொண்டால் அவையெல்லாம் புலப்படும்.

‘ஐயோ, புத்தகம் படிக்கவேண்டுமென்று ஆசைதான்; ஆனால், நேரமே இல்லை’ என்று இதுகாறும் சொன்னவர்களுக்காகப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. ‘இதையெல்லாம் செய்ய வேண்டும்; ஆனால் பொழுதில்லை’ என்று இதுகாறும் புலம்பியவர்களுக்காக அந்த வேலைகள் விழித்திருக்கின்றன.

நூல்கள், செடிகள், தோட்டம், செல்லப் பிராணி, வீட்டுத் தூய்மை, இசை, பூஜை, ஸ்லோகங்கள், அன்பு உரையாடல் என்று இப்படி எத்தனை எத்தனையோ காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதற்காக இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அவகாசம்தான் இந்தச் சமூகச் சேய்மை.

வெளியே சென்றுவருபவர்கள்!

ஊரடங்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்காகக் குடும்ப உறுப்பினர் வெளியே செல்ல நேரிடலாம். இத்தகைய நிலையில், சில நெறிமுறைகளை நாமே கையாளலாம். எல்லோரும் வெளியே செல்லாமல், ஒரேயொருவர் மட்டும் செல்லலாம். எப்போதும் அவர் ஒருவரே செல்வது நலம். ஒவ்வொரு பொருளை வாங்குவதற்காகவும் பலமுறை செல்லாமல், எல்லாவற்றையும் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒரேயொரு முறை செல்லலாம்.

எப்போது எடுத்துச் செல்வதும் ஒரே பையாக இருந்தால் நல்லது. காசு வைத்திருக்கும் பையோ பர்ஸோகூட ஒன்றேயாக இருக்கட்டும். அதில் வைக்கும் ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ அதில் மட்டுமே வைத்திருக்கலாம். வீட்டில் உள்ள அல்லது இன்னொரு குடும்ப நபரிடம் உள்ள தாளோடோ நாணயத்தோடோ கலந்துவிட வேண்டாம்.

எப்போது வெளியே சென்றாலும் ஒரே உடையை அணிதல் நலம். முடிந்தவரை உடலை நன்கு மூடிய உடையாக அது இருக்கட்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன், அந்த உடையை, மணிபர்ஸை, பையை வீட்டில் எங்காவது தனியாக, பிறபொருள்களோடு சேராத வகையில் வைத்துவிட வேண்டும். உடனடியாகச் சுத்தம் செய்தால் இன்னமும் நல்லது.

இவ்வாறு செல்லும்போது, கைபேசியை எடுத்துச் செல்ல வேண்டாம். முடிந்தவரை வாகனத்தில் செல்லாமல், நடையாகவே செல்ல வேண்டும். நீண்ட தொலைவு செல்வதை இது தடுக்கும். வெளியிலிருந்து வந்தவுடன், கைகளையும் கால்களையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

முடிந்தால் ஒருமுறை நன்றாகக் குளித்துவிடலாம். கடைகளிலும் பிற இடங்களிலும் முடிந்தவரை எந்தப் பொருளையும் பரப்பையும் தொடாமல் இருக்கலாம். கடையில் கூட்டமாக இருந்தால், உள்ளே செல்வதைத் தவிர்த்துவிடலாம். கதவைத் திறப்பது, குமிழைப் பிடிப்பது, கம்பியைப் பிடிப்பது போன்ற செயல்களை, ஒடுங்கு கரத்தால் ( non-dominant hand; வலக்கை பழக்கமுள்ளவர்களுக்கு இடது கை, ஒடுங்கு கரமாகும்; இடக்கை பழக்கமுள்ளவர்களுக்கு வலது கை, ஒடுங்கு கரமாகும்) செய்யலாம்.

ஓங்கு கரத்தைத்தான் (dominant hand) இயல்பாக முகத்திற்கும், கண்ணிற்கும், மூக்கிற்கும் கொண்டுசெல்வோம். ஒடுங்கு கரத்தைக் கொண்டு செல்லமாட்டோம்.

சோஷியல் டிஸ்டன்ஸ்

கண்டிப்பாக அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருப்பவர்கள் (அலுவலக அல்லது வேறு அவசியப் பணி காரணமாக), வீட்டிலும், ஏனைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கலாம். வெளியில் எங்குப் போனாலும், அடுத்த நபரிடமிருந்து குறைந்தபட்சம் நான்கைந்து அடி தள்ளியே இருக்கலாம். பயணங்கள் கண்டிப்பாக இப்போது வேண்டாம்.

பொறுப்பும்... பொறுமையும்...!

‘தனித்திரு’ என்றார் வள்ளல் பெருமான். தீமைகளைத் தவிர்த்து ஆன்ம மேம்பாட்டிற்குத் தனிமை உதவுவதைப் போலவே, நோய்த் தீமையைத் தவிர்த்து, ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் தனிமை உதவும். தனிமைப்படுத்துதல் என்பதும் சேய்மைப்படுத்துதல் என்பதும் மனிதர்களை ஒதுக்குவதற்காக அல்ல; நோயை ஒதுக்கித் தொலைப்பதற்காக! சேய்மைப்பட்டிருப்பது என்பது சுமையோ அழுத்தமோ அல்ல; பொறுப்பும் பொறுமையும் ஆகும்.

இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்ட வாடா!

Last Updated : Mar 30, 2020, 8:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details