சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்க்கு, "பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்து, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஓபிஎஸ் தரப்பினரின் கருத்தையும் கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதன் மூலம் ஈபிஎஸ் அணி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து, தங்கள் அணியின் வேட்பாளரை வாபஸ் பெற ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் அணியினர், தற்போது தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலேயே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது. ஆனால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஓபிஎஸ் அணியினரை உள்ளடங்கிய பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடனே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலையே தங்கள் வெற்றியாகக் கருதி, தங்கள் முடிவை ஓபிஎஸ் தரப்பு மாற்றிக் கொண்டுள்ளது. ஒருவேளை இடைத்தேர்தலில் நின்றாலும், தங்களுக்கு சாதகமான முடிவு வராது என்பதால், ஓபிஎஸ் இந்த முடிவை எட்டி இருக்கிறார் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இ-மெயில் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பியுள்ளார்.
கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக வேட்பாளர் விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும் என ஈபிஎஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் அதை விரிவான அறிக்கையாகத் தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் வரும் திங்கட்கிழமை அன்று கொடுப்பதற்காக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஏற்பாடு செய்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் இந்த அஃபிடவிட் படிவம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர்களும், இதில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்று கூற இருக்கின்றனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தனது நிலையை உறுதி செய்வதற்காகவே ஓபிஎஸ் போராடி வந்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலேயே இல்லை எனக் கூறியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இப்போது வந்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவு, ஓபிஎஸ்ஸும் உள்ளடங்கியது தான் அதிமுக என்று உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ள ஓபிஎஸ் விரும்பவில்லை. இந்த இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணிக்கு எதிராக தாங்கள் போட்டியிட்டால் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்பதால், பாஜகவை களமிறக்கி விடலாம் என ஓபிஎஸ் முயற்சித்தார்.
ஆனால், பாஜக அதற்கு முன்வரவில்லை. இதனால், கால தாமதம் செய்து வந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்ததால் வேறு வழியின்றி தானும் வேட்பாளரை அறிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவையே தங்கள் தரப்பிற்கு சாதகமாக்கி, தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறும் முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், தங்கள் அணியின் பலவீனம் வெட்ட வெளிச்சமாவதை ஓபிஎஸ் தரப்பினர் தவிர்க்க நினைக்கிறார். மேலும், தான் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. ஈபிஎஸ் அணியினரும், ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினருக்கும் வேட்பாளர் ஒப்புகை படிவத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இதனால், தான் அதிமுகவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதையே வெற்றியாகக் கருதி, இடைத்தேர்தல் களத்தில் இருந்து விலக ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு தான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். அந்த அடிப்படையில், தற்போது எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளருக்கே இரட்டை இலை சின்னம் செல்வதற்கு, ஆதரவு அளிக்கும் முடிவை ஓபிஎஸ் எடுத்திருக்கிறார். இதன் மூலம், தான் கட்சியின் நலனுக்காகவே செயல்படுவதாகவும் ஓபிஎஸ் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன், "இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவரை ஆதரிக்கும் கட்டத்திற்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவரை எதிர்த்து ஓபிஎஸ் போட்டியிட முடியாது. அதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து போட்டியில் இருந்து விலகும் முடிவை தான் ஓபிஎஸ் எடுப்பார். தற்போது வந்த தீர்ப்பு என்பது இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், தேர்தல் முடிந்த பிறகுமே அதிமுகவில் குழப்பமான சூழலே நிலவ வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.
இந்நிலையில் பொதுக்குழு படிவத்தில் தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இல்லாததை உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட உள்ளோம் என ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார், அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:Erode East By election: பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி பிஜேபி - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும்தாக்கு!