இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்," பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரூ.2,500 வழங்கப்படும் என, கடந்த 19ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பான அரசாணையில் ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், டிசம்பர் 21ஆம் தேதியே தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். தேர்தலை எண்ணி அவர் செய்த காரியம் அது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அதிமுகவினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
தேர்தலை மனதில் வைத்து, அதிமுக நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசு போல் காட்டிக் கொள்ள முதலமைச்சர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. பொங்கல் பரிசு மக்களின் வரிப்பணம். அது மக்களுக்கே திரும்பிப் போவதைத் திராவிட முன்னேற்றக் கழகம் மனமார வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை அதிமுகவினரை வைத்து வழங்குவது எப்படி சரியாகும்.