வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார்.
அப்போது அவர் தனது வாதத்தில், "2018இல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஐந்து ஆண்டு அனுமதி கேட்டபோது, தண்ணீர் மாசுபாடு, காப்பர் கழிவுகளை முறையாக நீக்காதது உள்ளிட்ட காரணங்களால் அனுமதி நீட்டிக்க மறுக்கப்பட்டது. போதுமான அவகாசம் வழங்கிய பின்னரும் ஸ்டெர்லைட் ஆலை தன்னுடைய தவறை திருத்திக் கொள்ளவில்லை.
2018இல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் செயல்படக்கூடாது என முதலில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் ஆலை தொடர்ந்து இயங்கியதால் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. நிலத்தடி நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, காப்பர் கழிவுகள் வெளியேற்றம், கடல் நீர் மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆலை மூடப்பட்டது.
ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 2016இல் ஆலையை சுற்றிய கிராமங்களில் ஆர்சனிக், சிங்க், சல்பர், குளோரைடு ஆகியவைகளின் அளவு நிலத்தடி நீரில் அதிகமாக இருந்தது.
2017 ஆகஸ்டில் ஆலையை சுற்றிய கண்காணிப்புப் பகுதி, ஆலை அருகே உள்ள கிணற்றில் ஆய்வு செய்தபோது, குளோரைடு 200 விழுக்காடு நிலையாகவும், சல்பைட் 200 விழுக்காடு நிலையாகவும், கால்சியம் 75 விழுக்காடு என்ற அளவிலும் இருந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலைகளிலிருந்து வெளியாகும் குளோரைடு உள்ளிட்ட வேதிப் பொருட்களின் அளவை விட ஸ்டெர்லைட் ஆலை அளவுக்கு அதிகமான மாசுபாட்டை வெளியேற்றியுள்ளது.
69 நிறுவனங்கள் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இருந்தாலும் அதிக பாதிப்பு உண்டாக்கும் சிவப்பு மண்டலமாக (red zone) ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே உள்ளது. கடல் மாசு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட தூரம் 120 மீட்டர் மட்டுமே. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் கடல் நீர் 800 மீட்டர் தூரத்திற்கு மாசு அடைந்துள்ளது.