ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஸ்வநாதன் இரண்டாவது நாளாக தன்னுடைய வாதத்தை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் "மாசுக்கட்டுப்பாடு என்பது உலகம் முழுவதுமுள்ள பிரச்னை, அதை கட்டுப்படுத்த வேண்டிய கடமை மாநில அரசிற்கும் உள்ளது. ஆகையால் ஆலைக்கழிவுகளை நிரந்தரமாக அகற்றாத ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டது." என்றார் .
அப்போது, "ஒவ்வொரு முறையும் அபாயகரமான கழிவு, மாசுப்பாடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டபோதும் உச்ச நீதிமன்றமும்,தேசிய பசுமை தீர்ப்பாயமும் ஆலை செயல்பட அனுமதித்தது. தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட பசுமை தீர்ப்பாயம் எந்த ஆதாரங்களையும் ஆராயாமல் எப்படி அனுமதி வழங்கியிருக்கும்? " என்று கேள்வி எழுப்பினார்கள்
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ''ஆலை நிரந்தரமாக இயங்க அனுமதி வழங்கவில்லை,ஒவ்வொரு ஆண்டும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது'' என்று தெரிவித்தார்
இதனையடுத்து நீதிபதிகள் ''அரசு தரப்பில் ஏன் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பாதிப்பு ஏற்பட்டது, மாசுபாடு எவ்வளவு என்பதை தெளிவாக ஆய்வு செய்யவில்லை. அதனால் தவறான ஆதாரங்களுடன் ஆலை மூடப்பட்டதாகவே இந்நீதிமன்றம் கருதுகிறது. அரசு முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் சாலையில் வந்து போராட வேண்டிய காரணம் என்ன? " என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் விஸ்வநாதன் "குறைபாடுகளை சரிசெய்வதாக உத்தரவாதம் வழங்கிய பின்னரும் அதை செயல்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது. 2016ஆம் ஆண்டு முதல் தண்ணீர் மற்றும் மண் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆலையைச் சுற்றியுள்ள நில உரிமையாளர்களிடம் இருந்து புகார் பெறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறை மேற்கொண்ட ஆய்வில் நிலம் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிபடுத்தப்பட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி ஆட்சியர் சார்பில் விளக்கம் கேட்டு வேதாந்தா நிறுவனத்துக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆலை கழிவுகளை அகற்றாததால், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறுவதை தடுக்கவும், பிற பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்" என்றார்.
மேலும், "மாசுப்பாட்டை ஏற்படுத்தும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. தனி நபராக இருந்தால் தண்டனை வழங்கவும், நிறுவனமாக இருந்தால் செயல்பட தடை விதிக்கவும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. தொழில்துறை சட்டத்தின்படி தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவது, கால நீட்டிப்பு செய்வது, ஒழுங்குமுறைபடுத்துதல், கட்டுப்படுத்துவது மற்றும் தடை விதிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது." என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுபாடு காரணமாக இருந்தாலும்,ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் முறையான விளக்கம் கேட்டு சட்டரீதியாக ஆலை மூடப்பட்டதா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.