சென்னை: அடையாறில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், கழிப்பறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் முழுமையாக சுற்றிப் பார்த்து ஆய்வு செய்வதுடன் பள்ளியில் உள்ள ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பு
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், “சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். சென்னையில் உள்ள 1,447 பள்ளிகளிலும் 48 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித் துறை அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இதுவரை 256 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. இந்த ஆய்வின்போது பள்ளியின் சுற்றுச்சுவர் மேற்கூரை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆராயப்பட்டன. மேலும், பள்ளியின் மீது சாய்ந்து இருக்கும் மரக்கிளைகளை அகற்றும்படி உத்தரவிடப்படுகிறது.
பாதுகாப்பாற்றக் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை
அரசுப் பள்ளிகளில் மோசமான நிலையிலுள்ள கட்டடங்களை உரிய அனுமதி பெற்று இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிகளில் சிறிய பழுது இருந்தால்கூட அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது பள்ளியின் சுற்றுச்சூழல், கழிப்பறை, வகுப்பறைக் கட்டடங்கள் போன்றவை பாதுகாப்பாக உள்ளதா என்பதையும், பள்ளி உரிமை பொறிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.
மேலும், பள்ளியின் வகுப்பறைகள், மாணவர்கள் தங்கி பயில்வதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றின் ஆய்வறிக்கை பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாங்கள் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்? - மாணவியின் பேச்சும் முழுப்பின்னணியும்..!