தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.80,000 பெட்ரோல் போட்டு வந்தும் ரூ.1,000 தான் கிடைத்தது - போலீசில் சிக்கிய ஜாகுவார் கொள்ளையர்கள் - காஜியாபாத்தில் இருவர் கைது

சென்னை நீலாங்கரையில் விஐபிக்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த வடமாநில கும்பலில் இருவரை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்து வருவதாக கூறப்படும் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

வடமாநில கொள்ளையர்கள்
வடமாநில கொள்ளையர்கள்

By

Published : Feb 21, 2023, 3:53 PM IST

Updated : Feb 21, 2023, 5:02 PM IST

சென்னை:நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் முக்கிய பிரமுகர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி நீலாங்கரை புளூ பீச் சாலை கேசுவரினா டிரைவ் பகுதியில், ஜாக்குவார் சொகுசு காரில் வந்த கும்பல், அங்குள்ள டிவிஎஸ் குழும உரிமையாளர், தோல் தொழிற்சாலை உரிமையாளர் நையார் சுல்தான் ஆகியோரது வீடுகளில் கொள்ளையடித்தனர். இதுகுறித்து சுல்தான் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலி பதிவெண்:சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் வந்த காரின் பதிவெண் போலியானது என கண்டறியப்பட்டது. புழல் பகுதியில், சொகுசு காரின் அசல் பதிவெண்ணை மீண்டும் அந்த கும்பல் பொருத்தியதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், காரின் உரிமையாளர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அம்பலமானது.

இருவர் கைது:சுங்கச்சாவடிகளில் கொள்ளை கும்பல் பயன்படுத்திய பாஸ்டேக் விவரங்கள் மூலம், உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பதுங்கியிருந்த கொள்ளையன் ராஜேஷ் குமார் யாதவை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், புனித் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

"ராபீன் ஹூட்" பாணியில்...: உத்தரபிரதேச மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட மோசடி செயல்களில் ஈடுபட்ட சஞ்சய் யாதவ் தலைமையில் இர்பான், ராஜேஷ் குமார் யாதவ், புனித் குமார் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறையில் இருந்த போது மற்றொரு ஆடம்பர கொள்ளையனான இர்பானுடன், சஞ்சய்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இர்பான் பீகார், பஞ்சாப் மாநிலங்களில் விஐபிக்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்ததுடன், "ராபின் ஹூட்" பாணியில் கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளார். கொள்ளையடிக்கும் பணத்தில் ஆடம்பர கார்களையும் வாங்கியுள்ளார். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரூ.1,000 மட்டுமே கொள்ளை:கைதான ராஜேஷ் குமார், புனித் குமார் ஆகியோர் போலீசாரிடம் கூறுகையில், "கூகுள் மேப் மூலம் சென்னையில் விஐபி ஏரியாக்களை தெரிந்து கொண்டோம். காஜியாபாத்தில் இருந்து சென்னைக்கு காரில் ரூ.80,000-க்கு பெட்ரோல் நிரப்பி வந்தோம். ஆனால் சென்னையில் ஒரு வீட்டில் ரூ.1,000 மற்றும் ஒரு ஜோடி செருப்பு மட்டுமே திருடினோம். பின்னர் அபிராமபுரம் போட் கிளப் சென்றோம். அங்கும் கொள்ளையடிக்க முடியாததால், ஊருக்கு திரும்பி சென்றுவிட்டோம்" என்றனர்.

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவான சஞ்சய் யாதவ், இர்பான் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒடுகத்தூரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்!

Last Updated : Feb 21, 2023, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details