தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் இருந்து பணியாற்றி, நேர்மைக்கு பெயர் போனவராக அறியப்படும் கக்கனின் குடும்பம் வாழ்ந்து வருகின்ற வீட்டை காலி செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தி.நகர் சிஐடி காலனியில் உள்ள கக்கன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.
சத்தியமூர்த்தி பவனில் கக்கனுக்கு சிலை - கே.எஸ்.அழகிரி
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் காமராஜர், சத்தியமூர்த்தி போன்றோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளதைப் போல், கக்கனுக்கும் விரைவில் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சில அரசின் விதிமுறைகளை சுட்டிக் காட்டி முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினரை அவர்களின் வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசாங்கம் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு இருபெரும் தலைவர்களின் வீட்டிற்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு, இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்றால் பாராட்டுகள் கிடைத்திருக்கும். சத்தியமூர்த்தி பவனில் காமராஜர், சத்தியமூர்த்தி போன்றோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளதைப் போல், தியாகி கக்கனுக்கும் விரைவில் சிலை அமைக்கப்படும்.
திமுக தலைவர் ஸ்டாலினை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பது நட்பின் அடிப்படையில் நடக்கும் சந்திப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் மூன்றாவது அணி அமைய சாத்தியம் இல்லை. ஒரு வேளை சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மூன்றாவது அணி பற்றி பேசினால் அதை ஸ்டாலின் தெளிவாக மறுத்து, காங்கிரஸ் தலைமையில் இணையுமாறு அவருக்கு அழைப்பு விடுவார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு ஹிந்து என கமல் தெரிவித்துள்ள கருத்து நூறு சதவீதம் உண்மை. அதை நான் வரவேற்கிறேன்" என்றார்.