தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எந்தக் குறையாக இருந்தாலும் சொல்லுங்க; அதை திமுக அரசு சரி செய்யும்' - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி

எந்தக் குறையையும் யாரும் எந்த நோக்கத்திற்காகத் தெரிவித்தாலும் அந்தக் குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய ஆயத்தமாக இருப்பதுதான் முதலமைச்சர் தலைமையிலான அரசு என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Minister for Food and Civil Supplies  Minister for Food and Civil Supplies Sakkarapani  Sakkarapani  statement  statement issued by the Minister for Food and Civil Supplies  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சக்கரபாணி  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை  அமைச்சர் சக்கரபாணி  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி  அறிக்கை
சக்கரபாணி

By

Published : Sep 20, 2021, 6:58 AM IST

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எதிர்க்கட்சித் தலைவர் நெல் கொள்முதல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கை குறித்தும் சட்டப்பேரவையில் நான் தெரிவித்த பதில் குறித்தும் குறிப்பிட்டுவிட்டு - 'டோக்கன் வழங்கி 15 நாள்களுக்கு மேலாகியும் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருக்கின்றனர். நெல் மூட்டைகள் மழையினால் முளைவிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாக்கு இல்லை, நெல் வைப்பதற்கு இடமில்லை. திட்டக்குடி வட்டத்தில் தர்ம குடிக்காடு, கொட்டாரம், போத்திரமங்களம், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் ஆகிய ஊர்களில் இயங்கிவந்த கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை. இதுபோல் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை' என்று செய்திகள் வந்துள்ளன.

கொள்முதல் நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் இயங்கவில்லை என்று தெரிவித்துள்ள ஆறு ஊர்களில், ஐந்து ஊர்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் முறையே 1884.24 மெ. டன், 2845 மெ. டன், 742.68 மெ. டன், 1066.48 மெ. டன், 575.20 மெ. டன் கொள்முதல் செய்யப்பட்டு அவை தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.

போத்திரமங்களத்தில் மட்டுமே 14.6.2021 அன்றுமுதல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. போத்திரமங்களத்தில் 2020 – 2021 பருவத்தில் 1091.53 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 2020 - 2021 பருவத்தில் இதுவரை 62 லட்சத்து 70 ஆயிரத்து 400 சாக்குகள் கொள்முதலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மூன்று லட்சத்து 51 ஆயிரம் சாக்குகள் கையிருப்பில் உள்ளன.

மேலும், கிருஷ்ணகிரி மண்டலத்திலிருந்து கடலூர் மண்டலத்திற்கு ஐந்து லட்சம் சாக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நெல்லினைப் பாதுகாப்பாக வைத்திட 1100 தார்ப்பாலின்களும் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

புள்ளி விவரங்கள்

கடலூர் மாவட்டத்தில் 38 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டு 35 ஆயிரம் ஹெக்டேரில் அறுவடை முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள மூன்றாயிரத்து ஹெக்டேரில் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 2019 - 2020 பருவத்தில் இதே காலகட்டத்தில் 155 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 677 மெ. டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 – 2021 பருவத்தில் 220 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 594 மெ. டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

2019 - 2020 பருவத்தில் 22 ஆயிரத்து 886 விவசாயிகளும் 2020 – 2021 பருவத்தில் 34 ஆயிரத்து 843 விவசாயிகளும் பயனடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் செயல்படாமல் உள்ளதாகக் குறிப்பிட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிலுள்ளன என்ற உண்மையைத் தெரிந்து மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களையும் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

பருவ கால கொள்முதல்

திமுக ஆட்சியில்தான் மாவட்ட அளவில் நெல் கொள்முதலைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு விவசாயிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2019 – 2020 பருவத்தில் இதே காலகட்டத்தில் 31.67 லட்சம் மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2020 – 2021 பருவத்தில் இதுவரை 43.52 லட்சம் மெ. டன் நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.

2021 – 2022 பருவத்தில், விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் முறையாக நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் கொள்முதல் செய்த நெல்லைப் பாதுகாப்பாகச் சேமித்திட வேண்டும் என்றும் நெல்லை அரவை ஆலைகளுக்கு விரைந்து அனுப்பி தரமான அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முதலமைச்சரின் ஆட்சி

மேலும் நெல் கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள், தார்பாலின்கள், நெல் தூற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வேளாண் பெருமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு 2021 – 2022 பருவத்திற்கு மாநில அரசின் ஊக்கத் தொகை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தி வழங்கி உழவர்கள் நலன் காக்கும் அரசாக விளங்கிவருகிறது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு.

எதிர்க்கட்சித் தலைவர் இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவர் பொத்தம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளேன். தான் மு.க. ஸ்டாலின் போன்று ஆட்சி செய்யவில்லையே என்று எதிர்க்கட்சித் தலைவர் ஏங்கும் வகையில் இந்த ஆட்சி நடைபெற்றுவருகிறது என்பதை அவர் அறிவார்.

குறைகளை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டுமல்ல தொடர்புடைய அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் மக்கள் நலன் காக்கும் இந்த அரசில் நெல் கொள்முதல் தொடர்பாக ஏதேனும் குறைபாடு இருந்தால் அப்பகுதியின் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அல்லது தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் அல்லது என்னைத் தொடர்புகொண்டு தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

எந்தக் குறையையும் யாரும் எந்த நோக்கத்திற்காகத் தெரிவித்தாலும் அந்தக் குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய ஆயத்தமாக உள்ளதுதான் முதலமைச்சர் தலைமையிலான அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: பஞ்சாப் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details