சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் இறந்துள்ளதையடுத்து மேலும் 16 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பல அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இச்சம்பவம் குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்க அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கோ.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 10 லட்சம் அறிவித்துள்ளதும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ரூ. தலா 50 ஆயிரமும், சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது ஆறுதலைத் தருகிறது.
தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து வருவது அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பது தொடர்பான குற்றங்கள் 1.49 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 11,828 பெண்கள் உட்பட 1,39,697 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ 1,77,99,900 மதிப்புள்ள சாராய ஊறல் ரூ. 2,07,20,760 மதிப்புடைய கள்ளச்சாராயம் ரூ. 31,21,700 மதிப்புடைய எரிசாராயம் கைப்பற்றியதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதிலிருந்து கள்ளச்சாராய விற்பனை சரளமாக நடந்து வருவதை அறிய முடிகிறது.