சென்னை:உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் கீரைகளை நாம் தினசரி வாழ்வில் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் மருந்தாக மட்டும் பயன்படும் மூலிகைகளைப் பதிவு பெற்ற மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என இந்திய முறை மருந்துகளுக்கு மாநில உரிமம் வழங்கும் அலுவலர் போ.ரா.மானேக்சா எச்சரித்துள்ளார்.
இந்திய மருத்துவ முறையான சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளைத் தயார் செய்து விற்பனை செய்வதற்கு இந்திய முறை மருந்துகளுக்கு மாநில உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டும். மேலும் சித்த மருத்துவப் படிப்பினை முடித்தவர்கள் அவர்களிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெறவரும் நோயாளிக்கு அவர்களே தயார் செய்த மருந்துகளை அளிக்கலாம்.
சித்த மருத்துவத்திற்கான சிகிச்சையைப் பதிவுப்பெற்ற மருத்துவர்களின் ஆலோசனையின் படி மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் கிளினிக்கிலும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இயற்கை முறை மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து மாநில உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருந்துகள்) போ.ரா.மானேக்சா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யாேகப் பேட்டியில் கூறியதாவது:
சித்தா, யுனானி, ஆயுர்வேதா மருந்துகளைத் தயாரிக்கவும், அதனை விற்பனை செய்ய எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?:சித்தா ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருந்துகளைப் பொறுத்த வரையில் இரண்டு முறைகளில் லைசன்ஸ் வழங்குகிறோம். முதலில் மருந்து தயாரிக்கும் உரிமம் மற்றும் லோன் லைசன்ஸ் அனுமதி வழங்குகிறோம். இந்த மருந்து தயாரிப்பதற்குச் சித்த மருத்துவர், தாவரவியலாளர்(Botanist)- ஆக இருக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்து தயாரிப்பதற்கு ஒரு ஆயுர்வேத மருத்துவர் மற்றும் தாவரவியலாளர்(Botanist) முக்கியமாக இருக்க வேண்டும். யுனானி மருத்துவம் தயாரிப்பதற்கும் ஒரு யுனானி மருத்துவர் மற்றும் தாவரவியலாளர்(Botanist) கட்டாயம் இருக்க வேண்டும். 1200 சதுர அடி அளவு தேவையான இடம் இருப்பதுடன் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும்.
மருந்துகள் விற்பதற்கான அனுமதி உரிமம் எவ்வாறு வழங்கப்படுகிறது?:இந்த வகை மருந்துகளைப் பொறுத்தவரையில் சாஸ்திரிக் மருந்துகள், ஆய்வு செய்து கண்டறியப்படும்( proprietary medicine) மருந்துகள் என 2 ஆகப் பிரிகிறது. சாஸ்த்ரிக் மருந்துகள் என்பது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் அல்லது ஆயுர்வேதா வைத்தியர்கள், யுனானி மருத்துவத்தில் ஹக்கீம்ஸ் நூல்களில் குறிப்பிட்டுள்ள மருந்துகள் ஆகும். சித்தர்கள் அல்லது வைத்திய நூல்களில் கூறப்பட்டுள்ள ஃபார்முலாவைக் கொண்டு புதிதாகத் தயாரிக்கும் மருந்துகள் proprietary medicine எனக் கூறுவோம்.
இந்த மருந்துகளுக்கான உரிமம் வழங்குவதற்கு முன்னர், மருத்துவக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் அந்த மருந்திற்கான உரிமம் வழங்கப்படும். அவர்கள் கூறியுள்ள மருந்து சரியான நோய்க்குரிய விதிமுறைகளின்படி இருக்கிறதா என்பதை ஏற்கனவே கூறப்பட்டுள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ நூல்களில் ஆய்வு செய்து, அதில் கூறப்பட்டுள்ள மருத்துவ முறைகளுக்கு ஒப்பாக இருந்தால், ஆலோசனைக்குப் பின்னர் அதற்கு அனுமதி வழங்குவோம்.
மருந்திற்கான உரிமம் வழங்குவதற்கு முன்னர், அந்த மருந்து எவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது குறித்தும் அதனுடைய நிலைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, அந்த மருந்தில் எந்தெந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்வோம். அதன் பின்னர்தான் மருந்திற்கான அனுமதி முறைப்படி வழங்குவோம்.
சித்த மருத்துவத்தில் இரும்பு தாதுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதா?:எல்லாம் மருந்து தயாரிக்கும் முறைகளிலும் தாதுக்கள் பயன்படுத்தப்படுகிறது. நமது உடல் தாதுக்களால் ஆனதுதான். அண்டத்தில் உள்ளது தான் பிண்டம், பிண்டத்தில் உள்ளது தான் அண்டம். மண்ணில் என்னென்ன மெட்டல் மற்றும் மினரல்ஸ் இருக்கிறதோ, அது நமது உடம்பிலும் கட்டாயம் இருக்கும். இரும்புச்சத்து நவீன மருத்துவத்திலும் தாராளமாகப் பயன்படுத்துகின்றன. சித்தா, யுனானி, ஆயுர்வேதா பதிவு பெற்ற மருத்துவர்கள் வழங்கக்கூடிய மருந்துகள் தரம் உள்ளதாக இருக்கும்.
இரும்புச்சத்து உடம்பிற்கு மிகவும் தேவையான ஒன்று. உடலில் ஹீமோகுளோபின் அளவு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அது ஆண்களுக்கு 14 முதல் 18டெசிலிட்டர் வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12 முதல் 16 டெசிலிட்டர் வரை இருக்க வேண்டும். இதற்கு இரும்புச் சத்து மிகவும் இன்றியமையாதது. மருந்தில் இரும்புச் சத்து குறித்து முறையாகப் பரிசோதனை செய்து, அதில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை என்பதை அறிந்த பிறகு தான் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புது வினோதமான நோய்களுக்கு, சித்த மருத்துவத்தில் எம்மாதிரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை மக்களுக்கு எந்த அளவிற்குப் பயன்பட்டுள்ளது?:சித்த மருத்துவத்தில் சித்தர்கள் 4 ஆயிரத்து 448 நோய்களைப் பற்றிக் கூறியுள்ளனர். அந்த நோய்கள் அனைத்தும் நூல்களில் இடம் பெற்று இருக்கின்றனவா என்பது குறித்துத் தெரியவில்லை. அவ்வளவு நோய்களைச் சித்தர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக டெங்கு காய்ச்சல் நேரத்தில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு பொதுமக்களுக்கு மிகவும் பலனை தந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். பப்பாளி இலைச்சாறு சாப்பிடும் போது ரத்தத்தில் தட்டனுக்கள் அதிகப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
இதேப்போல் பெருந்தொற்றுக் கரோனா காலத்தில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருந்தது. இதனைக் கிளினிக் ஆய்வு மூலமாக கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் பரிசோதனை செய்து நிருப்பித்துள்ளோம். சித்தா, ஆயுர்வேத மருந்துகள் பெருந்தொற்று காலத்திலும் மற்றும் புதிய புதிய நோய்கள் வரும் காலத்திலும் மக்களுக்குப் பக்க விளைவு இல்லாத நல்ல பயனை கொடுத்துள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.
சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறதா?:சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு சித்தா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகப் புதிதாக தேவையான நவீன இயந்திரங்களைக் கொடுத்துள்ளனர். அந்த இயந்திரங்களைப் பயன்படுத்திச் சிறப்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மருந்து பரிசோதனை ஆய்வகம் ஒன்றும் அமைக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வெளியில் விற்கப்படும் மருந்துகள் சரியான தரத்தில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மருந்து பரிசோதனை நிலையத்தில் தேவையான இயந்திரங்கள் நிறுவப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. நிலவேம்பு குடிநீர், வைரஸ் காய்ச்சலுக்கு எந்த வித பக்க விளைவும் இல்லாமல் குணப்படுத்தும் என்பதையும், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கபசுர குடிநீர் பயனுள்ளதாக இருந்தது என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளோம்.