தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ”வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் சேலம் கிருஷ்ணகிரி மதுரை திருநெல்வேலியில் நான்கு சிறப்பு நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்கப்படும. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான குறைந்தபட்ச இழப்பீடு தொகை 1 லட்சத்திலிருந்து 12 லட்சம் ரூபாய்வரை உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய ஆணையம் அமைக்கப்படும். தன்னாட்சியுடன் செயல்படக்கூடிய இந்த அமைப்புக்கு நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
ஆதிதிராவிடர் பள்ளிகள் மேற்கண்ட ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும். இங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ளும். ஆனால் இத்தகைய ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள நிர்வாகம் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபடாது.
புதிய நீதிமன்றங்கள்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை கையாள தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. எனினும் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் கிருஷ்ணகிரி மதுரை திருநெல்வேலி, சேலம் என நான்கு மாவட்டங்களிலும் புதிய நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மதுரையிலும் திருநெல்வேலியிலும் வழக்குகள் கூடுதலாக நிலுவையில் இருப்பதால் அங்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சாதி பேதம் அற்ற நிலையை கடைப்பிடிக்கும் கிராமங்களில் சாதி பேதமற்ற மயானங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஊக்கப்படுத்தும் வகையில் அடிப்படை வளர்ச்சிக்கு கூடுதலாக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மை கருதி 85 ஆயிரம் முதல் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்வரை வழங்கப்படுகிறது.
இனிமேல் இந்தத் தொகையானது ஒரு லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி மாநில அரசின் சார்பில் வழங்கப்படும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் இனி விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்ற நிலையை விடக்கூடிய வகையிலும் தமிழ்நாடு மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அய்யன் வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் வழி நாம் அனைவரும் நடக்க வேண்டும்” என்றார்.