சென்னை: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 17 மணி நேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்ற போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை நேற்று முதலமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் சந்தித்தனர். இந்நிலையில் இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், "அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கையாளப்பட்டதில் மனித உரிமை மீறல் இருப்பதாக தெரிவித்திருந்தார். தன்னை கைது செய்யும்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாகவும், தரையில் போட்டு தரதரவென இழுத்ததாகவும் செந்தில் பாலாஜி என்னிடம் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கையாண்டதில் அவர் கீழே விழுந்ததில் பின்னந்தலையில் காயம் அடைந்துள்ளதாக கூறினார். விசாரணையின் போது தன்னை துன்புறுத்திய சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து அவரிடம் விசாரணை நடத்தி உள்ளது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனக்கு துன்பம் விளைவித்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். மேலும் கைது நடவடிக்கையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாகவும் கூறியிருக்கிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்” என தெரிவித்தார். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்திக்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை பாதுகாப்பில் இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “நீதிமன்ற காவலில் இருப்பதால் அமைச்சரை சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அமைச்சரின் உறவினரிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தோம். அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: TR Baalu Defamation Case: டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கு: அண்ணாமலை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!